தொழிற்சாலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் தர்னா
By DIN | Published On : 25th June 2019 07:38 AM | Last Updated : 25th June 2019 07:38 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை அருகே அமைந்துள்ள பொறியியல் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கிவரும் தனியார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 39 பேர் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம் அருகே சிப்காட் பேஸ்-3 தொழிற்பேட்டையில் பொறியியல் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கிவரும் தனியார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 39 பேரை தொழிற்சாலை நிர்வாகத்தினர் எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென பணி நீக்கம் செய்து விட்டது. இதைக் கண்டித்தும், தாங்களுக்கு மீண்டும் பணி வழங்குவதோடு நிரந்தரத் தொழிலாளர்களாக பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலைக்கு எதிரே அவர்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.