அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதை எதிர்த்து தர்னா

வேலூர் பிள்ளையார் குப்பம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து

வேலூர் பிள்ளையார் குப்பம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். 
வேலூர் அருகே பிள்ளையார்குப்பம், பழத்தோட்டம் பகுதியில் குடிசை மாற்றுவாரியம் சார்பில் சுமார் ஒன்றே முக்கால் ஏக்கரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கொடிகள் நடப்பட்டுள்ளன. 
இதையறிந்த அப்பகுதி மக்கள் சுமார் 300 பேர், செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் விரைந்து சென்று தர்னாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அப்பகுதி மக்கள் கூறியது:
இப்பகுதியில் பல ஆண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இவர்களில் பெரும்பாலானோர் குடிசைகளில் வசித்து வருகிறோம். 
இந்நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வெளியில் உள்ளவர்களை குடியேற்றுவது முறையாகாது. மேலும், அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தின் அருகே கசிவுநீர் குட்டை உள்ளது. 
ஏற்கெனவே இப்பகுதியில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைந்துவிட்டால் குடிநீர் பிரச்னை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு கண்ட பிறகு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்றனர்.
அதற்கு பதிலளித்த வட்டாட்சியர் ரமேஷ், பொதுமக்களின் புகார்களை மனுக்களாக எழுதித் தரும்பட்சத்தில் அவற்றை உயரதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com