கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் குக்கிராமங்களுக்கும் அதிவேக இணையச் சேவை: பிஎஸ்என்எல் பொது மேலாளர் தகவல்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் குக்கிராமங்களுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக இணையச்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் குக்கிராமங்களுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக இணையச் சேவை வழங்கப்படுவதாக வேலூர் தொலைத்தொடர்பு மாவட்ட பொது மேலாளர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.
ஆம்பூர் பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையத்தில் அதிநவீன அதிவேக பாரத் ஃபைபர் இணைய இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியை அவர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
வேலூர் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் அதிவேக பாரத் ஃபைபர் (கண்ணாடி இழை) கேபிள் இணைய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1,500 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 900 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.577 முதல் ரூ.1927 வரை பல்வேறு திட்டங்கள் உள்ளன. இணைய இணைப்பின் வேகம் 50 முதல் 200 எம்பிபீஎஸ் வரை  வழங்கப்படுகிறது. இதனால் பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகியவற்றை மிக வேகமாக மேற்கொள்ளலாம்.
மற்ற நிறுவனங்களின் செல்லிடப்பேசி சேவைகளாக இருந்தால் அதிகபட்சமாக 10 எம்பிபீஎஸ் வரையும், தரைவழி இணைப்பாக இருந்தால் 4 எம்பிபீஎஸ் வரையும்தான் வேகம் உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் ஃபைபர் கேபிள் இணைப்பு திட்டத்தில் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த இணைப்பு நகர்ப்புறங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமே நேரடியாக வழங்குகிறது. ஏற்கெனவே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிராமப் பகுதிகளில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனால் குக்கிராமங்களுக்கும் அதிவேக இணையச் சேவை வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  க்ஷ்வேறு நிறுவனங்களில் இருந்து செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் 40 ஆயிரம் பேர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.  கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் புதிதாக 8,200 பேர் தரைவழி இணைப்பைப் பெற்றுள்ளனர். 5,200 பேர் பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ளனர்.   
மார்ச் மாதச் சலுகை: இந்த மாதம் முழுவதும் ரூ.670-க்கு (5 ஜிபி திட்டம்) பிராட் பேண்ட் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. மோடம் இருப்பவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மோடம் இல்லாதவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ரூ.120 மாத வாடகைக்கு மோடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.  இயற்கைப் பேரிடர் காலங்களான கஜா புயல், கேரள வெள்ளம், சென்னை பெருவெள்ளம் போன்ற சமயங்களில் பிஎஸ்என்எல் மட்டுமே விரைவாக தொலைத் தொடர்பு சாதனங்களை சரிசெய்து சேவைகளை வழங்கியது. 
வேலூர் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் 35 இடங்களில் 3ஜி கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 15 கோபுரங்கள் அமைக்கப்படும். மேலும் பிஎஸ்என்எல் கோபுரங்களே இல்லாத 115 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வருங்காலத்தில் புதிதாக கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
அப்போது, வேலூர் தொலைத் தொடர்பு மாவட்ட துணைப் பொது மேலாளர்கள் வேலாயுதம், ஆறுமுகம், கீதாபாய், கோட்டப் பொறியாளர் பெரியசாமி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com