ஏலகிரி அரசு ஏகலைவா பள்ளியை ஜவ்வாது மலைக்கு மாற்ற எதிர்ப்பு
By DIN | Published On : 04th March 2019 01:11 AM | Last Updated : 04th March 2019 01:11 AM | அ+அ அ- |

ஏலகிரி மலையில் உள்ள அரசு ஏகலைவா பள்ளியை ஜவ்வாது மலைக்கு மாற்றக் கூடாது என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூரில் அரசு ஏகலைவா ஆங்கிலப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளி திருப்பத்தூரை அடுத்த புதூர்நாடு, கீழூர் பகுதிக்கு மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஏலகிரி மலையில் உள்ள யாத்ரி நிவாஸ் அரசு தங்கும் விடுதியில் முன்னாள் ஊராட்சித் தலைவர் கே. கோவிந்தசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோனைக் கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில், தற்போது பள்ளி தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. புதுர்நாடு கீழூர் பகுதியில் இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. பள்ளியை அப்பகுதிக்கு மாற்றக் கூடாது. புதூர்நாடு பகுதியிலிருந்து 20 கி.மீ. கடந்து கீழூர் கிராமம் உள்ளதால் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் அங்கு படிப்பதில் சிரமம் ஏற்படும். நிலாவூர் பகுதியில் பள்ளி அமைப்பதற்கான இடத்தை மக்களே வழங்குவதாகவும் தெரிவித்தனர். எனவே, அனைத்து வசதிகளும் உள்ள நிலாவூர் பகுதியில் பள்ளியை அமைக்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதில் எஸ்.சி., எஸ்.டி. சங்கச் செயலர் எஸ்.முனிரத்தினம், சமூக ஆர்வலர் கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சி.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.