பொதுக்கூட்டத்துக்கு அனுமதி பெற புதிய செயலி

வேலூர் மாவட்டத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுவர் விளம்பரம் எழுதுவதற்கும்,

வேலூர் மாவட்டத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுவர் விளம்பரம் எழுதுவதற்கும், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி பெறவும் சுவிதா என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது மார்ச் 19-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் அலுவலர் வேட்புமனுக்களை அவரது அறையில் பெறுகிறார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் அவரது அறையில் வேட்புமனுக்களை பெறுகிறார்.
இடைத் தேர்தல் நடைபெறும் சோளிங்கர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனித் துணை ஆட்சியர் (சிப்காட் நிலம் எடுப்பு-பனப்பாக்கம்) வேட்புமனுக்களைப் பெறுவார். குடியாத்தம் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) வேட்புமனுக்களைப் பெறுவார்.
ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் வேட்புமனுக்களைப் பெறுவார்.
வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரக் கட்டுப்பாட்டு கருவி 5,339, வாக்குச்சீட்டு கருவி 9,343, யாருக்கு வாக்களித்தோம் என்று தெரிவிக்கும் (விவி பேட்) கருவி 5,754 எண்ணிக்கையில் கையிருப்பில் உள்ளன. 18,938 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் தொடர்பான விதிமீறல் புகார்களை மாவட்டத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 1800 425 3692 என்ற எண்ணிக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.  
வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிக்க உதவிச் செலவின பார்வையாளர், விடியோ பார்வைக்குழு, கணக்கு தணிக்கை குழு, மீடியா சர்டிபிகேஷன் அன்ட் மானிட்டரிங் டீம், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (வாக்காளர் சேவை) ஆகிய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு தேர்தல் செலவினப் பார்வையாளர் என அரக்கோணம் மற்றும் வேலூர் தொகுதிகளுக்கு தலா ஒரு தேர்தல் செலவின பார்வையாளர் வருகை தர உள்ளனர்.  
குடியாத்தம் (தனி), ஆம்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியிலும், சோளிங்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியிலும் அமைக்கப்படும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்படும் என்றார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், தேர்தல் வட்டாட்சியர் (பொறுப்பு) விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com