வேலூர் மக்களவைத் தொகுதி: பாலாறு பாதுகாப்பு இயக்க வேட்பாளர் உள்பட இருவர் மனுத் தாக்கல்

மக்களவைத் தேர்தலில், வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட பாலாறு பாதுகாப்பு இயக்க வேட்பாளர் உள்பட இருவர் வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். 

மக்களவைத் தேர்தலில், வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட பாலாறு பாதுகாப்பு இயக்க வேட்பாளர் உள்பட இருவர் வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். 
ஆம்பூரைச் சேர்ந்த எம்.ஆர்.வெங்கடேசன்(47), பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பினராக உள்ளார். இவர் மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவருடன் இயக்கத் தலைவர் ஏ.சி.வெங்கடேசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கன்னையா நாயுடு, மாவட்ட பொதுச் செயலர் கலத்தூர் வெங்கடேசன், பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் மகளிரணிச் செயலர் சுசீலா ஆகியோர் உடன் வந்தனர்.
வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து ஏ.சி.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியது:  
தமிழகத்தில் உள்ள நதிநீர்ப் பிரச்னைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது பாலாறு விவகாரம். வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட பாசனப் பகுதிகளின் நீராதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பாலாறு, விதிமுறைகளை மீறி ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணைகளாலும், தொடரும் மணல் கொள்ளையாலும் வறண்டு பாழ்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகத் தொடரும் பாலாறு பிரச்னைக்கு தீர்வு காண விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்தப் பிரச்னையை தேர்தலுக்காக மட்டும் அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டு பின்னர் கைவிட்டு விடுகின்றன. நடக்க உள்ள மக்களவைத் தேர்தல் மூலமாவது இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக ஆகியவை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் எதிலும் பாலாறு பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசப்படாதது விவசாயிகளை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, நடைபெற உள்ள மக்களவைத்  தேர்தலில் பாலாறு விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தல் அறிக்கைகளில் பாலாறு விவகாரம் புறக்கணிக்கப்பட்டது குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும் பாலாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுவேட்பாளராக எம்.ஆர்.வெங்கடேசன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆப்பிள், சூட்கேஸ், பக்கெட் ஆகிய சின்னங்கள் கோரப்பட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் இந்த பொது வேட்பாளர் மனுவை வாபஸ் பெற மாட்டார். 
இனியாவது பிரதான அரசியல் கட்சிகள் மக்களிடம் வாக்கு சேகரிக்கும்போது பாலாறு பிரச்னைக்கு தீர்வு காணவும், தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களை மறு சீரமைக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் உறுதியளிக்க வேண்டும் என்றார் அவர்.
மற்றொருவர் மனு தாக்கல்: இதேபோல், வேலூர் சாய்நாதபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(59) என்பவரும் வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். திமுக-வில் நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்த இவர், அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 
கட்சியில் பல மூத்த நிர்வாகிகள் உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் துரைமுருகன் தனது மகனுக்கு வாய்ப்பு பெற்றுத் தந்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார். அவர் மதிமுக-வின் வேலூர் மாவட்டச் செயலரான சுப்பிரமணியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தொகுதிகளில்...
சோளிங்கர், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத் தேர்தலில் 3-ஆவது நாளான வியாழக்கிழமையும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.  சோளிங்கர் தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத் சார்பில் அவரது ஆதரவாளர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com