செங்கல் சூளையிலிருந்து கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு
By DIN | Published On : 18th May 2019 04:00 AM | Last Updated : 18th May 2019 04:00 AM | அ+அ அ- |

கணியம்பாடி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த 6 பேரை வருவாய்த் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
கணியம்பாடியைச் சேர்ந்தவர் கண்ணன், அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது செங்கல் சூளையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக கொத்தடிமை மீட்பு மறுவாழ்வு சங்கத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேலூர் சார்-ஆட்சியர் கே.மெகராஜ் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கண்ணனுக்குச் சொந்தமான செங்கல் சூளையில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி, அவரது மனைவி பரிமளா, மகள்கள் பிரியா (20), நித்யா (18), பிரியாவின் கணவர் ராமு (21), குழந்தை வினோத் (5) ஆகியோர் கடந்த 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணனிடம் முன்பணமாக வாங்கிய ரூ. 20 ஆயிரம் பணத்துக்காக குறைந்த கூலிக்கு அதிகப் படியான நேரம் வேலை செய்து வந்தனர். இதுதவிர, முரளி குடும்பத்தினருக்கு தினக்கூலியாக ரூ. 500 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதையறிந்த முரளியின் உறவினர் ஒருவர் அளித்த தகவலின்பேரில் அவர்கள் மீட்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் 6 பேருக்கும் விடுதலைச் சான்றுடன், அரசின் முதற்கட்ட நிவாரணம் அளிக்கப்பட்டு அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை கொத்தடிமைகளாகப் பணியமர்த்திய கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மீட்கப்பட்டவர்களுக்கு காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உதவிப் பொருள்களை அதன் அவைத் தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன், செயலர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் வழங்கினார்.