பொற்கொடியம்மன் கோயில் ஏரித் திருவிழாவில் ரூ. 9.88 லட்சம் காணிக்கை
By DIN | Published On : 18th May 2019 04:02 AM | Last Updated : 18th May 2019 04:02 AM | அ+அ அ- |

வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோயில் ஏரித் திருவிழாவில் ரூ. 9.88 லட்சம், 8 கிராம் தங்கம், 23 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.
அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட வல்லண்டராமம், வேலங்காடு, அன்னாச்சிபாளையம், பனங்காடு ஆகிய கிராமங்கள் சேர்ந்து பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித் திருவிழாவை ஆண்டுதோரும் சித்திரை மாத கடைசி புதன்கிழமையில் நடத்துவது வழக்கம்.
அதன்படி, இவ்வாண்டு ஏரித்திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
ஏரித்திருவிழாவின் சிறப்பு அம்சமான வல்லண்டராமம் கிராமத்திலிருந்து புஷ்ப ரதம் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவைத் தொடர்ந்து கோயில் உண்டியல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில், உண்டியலில் ரூ. 9 லட்சத்து 88 ஆயிரத்து 236, 8 கிராம் தங்கம், 23 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.