உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தவிக்கும் மாதிகா சமூகத்தினர்: 10 ஆயிரம் ஆதி ஆந்திரப் பிரிவினருக்கு  ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை 

கல்வி, வேலைவாய்ப்புகளில் 3 சதவீத உள்ஒதுக்கீடு பெறுவதற்கான ஜாதிப்பிரிவினராக இருந்தும்

கல்வி, வேலைவாய்ப்புகளில் 3 சதவீத உள்ஒதுக்கீடு பெறுவதற்கான ஜாதிப்பிரிவினராக இருந்தும் எஸ்.சி.(ஏ) சாதிச்சான்றிதழ் வழங்கப்படாததால் வேலூர் மாவட்டத்திலுள்ள மாதிகா, ஆதி ஆந்திரர் சமூகத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அச்சலுகையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். 
இச்சமூக மக்களின் மேம்பாட்டைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சிறப்பு முகாம் நடத்தி தகுதியுடைய மாதிகா, ஆதி ஆந்திரர் சமூகத்தினருக்கு எஸ்.சி.(ஏ) ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2009 பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையிலான ஒருநபர் குழு அளித்த பரிந்துரையின்பேரில், தாழ்த்தப்பட்ட மக்கள் என வகுக்கப்பட்டுள்ள 72 ஜாதிப்பட்டியலில் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மாதிகா, தோட்டி ஆகிய 7 பிரிவினருக்கு இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 
இதன்படி, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எஸ்.சி. என ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் நிலையில் இக்குறிப்பிட்ட 7 சாதிப்பிரிவினருக்கு மட்டும் எஸ்சி (ஏ) என ஜாதிச்சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கல்வி, வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து எஸ்.சி.(ஏ) ஜாதிச்சான்றிதழ் வைத்துள்ளவர்கள் 3 சதவீதம் உள்ஒதுக்கீடு பெற முடிகிறது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள குறிப்பிட்ட இந்த 7 ஜாதிப் பிரிவுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி, குடிமைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளிலும் வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
அதேசமயம், உள்ஒதுக்கீடு சலுகைக்கு உரிய ஜாதிப் பிரிவினராக இருந்தும் எஸ்.சி.(ஏ) ஜாதிச்சான்றிதழ் இல்லாததால் அதற்குரிய சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர் வேலூர் மாவட்டத் தைச் சேர்ந்த மாதிகா, ஆதி ஆந்திரர் சமூக மக்கள். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இவ்விரு சமூகத்தினர், வேலூர் மாநகரில் மட்டும் கஸ்பா தோட்டி காலனி, காகிதப்பட்டறை, குப்பம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதுதவிர, அரக்கோணம் முதல் திருப்பத்தூர் வரை அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரகப் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
எனினும், இவர்களில் பெரும்பகுதியினருக்கு இதுவரை ஆதிதிராவிடர் என்ற அடிப்படையில் எஸ்.சி. ஜாதிச்சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கல்வி, வேலைவாய்ப்புகளில் 3 சதவீத உள்ஒதுக்கீடு பெற முடியாமல் தவித்து வருவதாக கூறுகிறார் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், "கற்பி' அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பி.பாலா. இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
 மாதிகா, ஆதி ஆந்திரர் சமூகத்தினர் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகமாகும். அவர்கள் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு சென்னை மாகாணமாக இருந்த காலம்தொட்டே 400 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில்தான் வசிக்கின்றனர். மாதிகா சமூகத்தினர் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளில் மலம் அள்ளும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 
சுதந்திரத்துக்குப் பிறகு இவ்விரு சமூகங்களில் இருந்து குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டபோது வசிக்குமிடம், தொழில் அடிப்படையில் அவர்கள் ஆதி திராவிடர் என்ற பெயரில் சேர்க்கப்பட்டு விட்டனர். இதனால், 2007-ஆம் ஆண்டு உள்ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் இதுவரை இச்சமூகத்தைச் சேர்ந்த பெரும்பகுதியினருக்கு ஆதி திராவிடர் என்ற பெயரில் எஸ்.சி. ஜாதிச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. 
இதனால், உள்ஒதுக்கீட்டு சலுகைக்குரிய ஜாதிப் பிரிவினராக இருந்தும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி, வேலைவாய்ப்புகளில் அந்தச் சலுகையைப் பெற முடியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, வட்டாட்சியர் முதல் தமிழக முதல்வர் வரை பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும் மாதிகா, ஆதி ஆந்திரர் சமூகத்தினருக்கு எஸ்.சி.(ஏ) ஜாதிச்சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. 
இந்த சமூகத்தில் தற்போது படித்து வேலை தேடும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களின் நலன்கருதி மாவட்ட நிர்வாகம் சிறப்பு முகாம் நடத்தி தகுதியுடைய மாதிகா, ஆதி ஆந்திரர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எஸ்.சி.(ஏ) ஜாதிச் சான்றிதழ் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூறுகையில், "எஸ்.சி.(ஏ) ஜாதிச் சான்றிதழ் இருந்திருந்தால் இச்சமூகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் பலரும் பல்வேறு அரசுப் பணிகளில் இருந்திருக்க முடியும். ஜாதிச்சான்றிதழ் இல்லாததாலேயே உள்ஒதுக்கீட்டுச் சலுகையை அனுபவிக்க முடியாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். எங்கள் சமூகத்தின் மேம்பாட்டை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மாதிகா, ஆதி ஆந்திரர் சமூகத்தினருக்கு எஸ்.சி.(ஏ) ஜாதிச் சான்றிதழ் கிடைக்க சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com