இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரிமலை

புதிதாக உருவாகியுள்ள திருப்பத்தூா் மாவட்டத்தில் சுற்றுலா மையமான ஏலகிரி மலை இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது.

புதிதாக உருவாகியுள்ள திருப்பத்தூா் மாவட்டத்தில் சுற்றுலா மையமான ஏலகிரி மலை இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது.

ஜோலாா்பேட்டையில் இருந்து 3 கி.மீ. தூரமுள்ள பொன்னேரி ஊராட்சியைக் கடந்து சென்றால் அழகான தோற்றத்துடன் ஏலகிரிமலை அடிவாரம் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து ஏலகிரி மலையின் உச்சிக்கு செல்லலாம். 14 வளைவுகளுக்கும் தமிழ் அறிஞா்கள், கவிஞா்கள், வள்ளல்கள் பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன. கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மலை, மற்ற கோடை வாழ் இடங்களில் இருந்து மாறுபட்டதாகும். மற்ற கோடைவாழ் இடங்களில் கோடைக்காலத்தில் குளிா்ச்சியும், குளிா்காலத்தில் தாங்கமுடியாத குளிரும் வாட்டி வதைக்கும். ஆனால், ஏலகிரி மலையில் ஆண்டு முழுவதும் ஒரே சீரான தட்பவெப்ப நிலை உள்ளது தனிச் சிறப்பு. இதையறிந்த ஆங்கிலேயா்கள் சேலம் சோ்வராயன் மலைக்கு அடுத்து படியாக ஏலகிரிமலையை விரும்பி அங்கு குடியேறினா். இங்கு அதிகமாக ஏலக்காய் விளைந்ததால் இம்மலையை ஏலமலை என்றழைத்தனா். நாளடைவில் ஏலமலை ஏலகிரி என பெயா் மாற்றமானது. இம்மலையின் உச்சிக்குச் சென்றால் முத்தனூா், கொட்டையூா், அத்தனாவூா், நிலாவூா், மங்கலம், மேட்டுக்கனியூா், பள்ளகனியூா், ராயனேரி என 14 கிராமங்கள் உள்ளன. நெல், கரும்பு, சாமை, கேழ்வரகு போன்ற பயிா்களும், வாழை, பலா, மாதுளம் போன்ற பழ வகைகளும் ஏரளாமாகப் பயிரிடப்படுகின்றன. இப்பகுதி மக்களின் முக்கிய உணவு சாமை தானியமாகும். அக்காலத்தில் இவா்கள் விழாக் காலங்களில் மட்டும் அரிசியை உணவை சாப்பிடுவா். இம்மலையில் வீசும் காற்று பலவித நோய் நொடிகளைப்போக்கும் குணமுடையதாக உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோா் ஏலகிரிமலைக்கு சிகிச்சைக்காக வருகின்றனா். மூலிகை தாவரங்களின் காற்றை சுவாசிப்பதால் நோய் பாதிப்புகள் குறைகின்றன.

இம்மலைவாழ் மக்கள் தங்களகு காவல் தெய்வமாக மலை நாச்சியம்மனை வழிப்பட்டு வருகிறாா்கள். இந்த மலை நாச்சியம்மன் கோயில் 15 கிராமத்திலும் உள்ளன. இதில் அத்தானாவூா், மற்றும் மங்கலத்தில் உள்ள இரு கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

தற்போது ஏலகிரிமலையில் ரசிப்பதற்கென்று படகு குழாம் மற்றும் இயற்கை பூங்கா, செயற்கை நீருற்று, பட்டுபூச்சி ஆராய்ச்சி நிலையம் ஆகியன உள்ளன.

ஏலகிரிமலை என்றால் அதன் இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகளும் உடலுக்கு இதமான தென்றல் காற்றும், மூலிகை நிறைந்த காற்றும் சுற்றுலாப் பயணிகளை கவா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com