பகவதிமலையில் 1,800 ஆண்டுகள் பழைமையான தமிழி கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

வேலூர் அருகே உள்ள பகவதி மலையில் இருந்து சுமார் 1,800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 3 தமிழி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
பகவதிமலையில் 1,800 ஆண்டுகள் பழைமையான தமிழி கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

வேலூர் அருகே உள்ள பகவதி மலையில் இருந்து சுமார் 1,800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 3 தமிழி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

தமிழ் மொழியின் காலத்தால் முந்தைய எழுத்து வடிவத்துக்கு பெயரே தமிழி ஆகும். அத்தகைய தமிழி எழுத்துகளுடன் கூடிய மூன்று கல்வெட்டுகள் வேலூர் நகரின் அருகே உள்ள பகவதி மலையில் ஆய்வு செய்து கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளரும், திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை தமிழாசிரியருமான ஈ.சங்கநாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது

பகவதிமலையில் சமண முனிவர்களுக்கு அமைக்கப்பட்ட படுகையின் மீது மூன்று தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. படுகைகள் கரடுமுரடாக வெட்டப்பட்டுள்ளன. எழுத்துகளும் மிகவும் மெல்லியதாக உள்ளன. இந்த மூன்று கல்வெட்டுகளும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளாகும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழி எழுத்துகளுடன் கூடிய 96 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த 3 கல்வெட்டுகளுடன் சேர்த்து அவற்றின் எண்ணிக்கை 99-ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர். 

இதுகுறித்து காட்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தொல்லியல் துறை உதவி இயக்குநர் ர.பூங்குன்றன் கூறியது:

பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் முதல் தமிழி கல்வெட்டு இவையாகும். முதல் கல்வெட்டில் "ள மகன் ஈதி பாளிய்' என எழுதப்பெற்றுள்ளது. இதில், "ஈத்த' என்ற சொல் "ஈதி' என்று தவறுதலாக எழுதப்பெற்றுள்ளது. இதுதவிர, கல்வெட்டு மரபில் "இள' என்று எழுதாமல் "ள' என்றே எழுதுவர். அந்தவகையில், இங்கு "ள' மகன் (இள மகன்) என்பது அப்பகுதியை ஆண்ட தலைவனைக் குறிக்கும். சங்க காலத்தில் அரசியல் தலைவர்கள் சமண முனிவர்களுக்கு அவ்வப்போது பள்ளி எனும் நினைவுச் சின்னங்களை உருவாக்குவர். இந்தக் கொடை சமயத் தலைவர் ஆதரவினை எதிர்பார்த்து அளிக்கப் பெறுவதாகும்.

இரண்டாம் கல்வெட்டில் "மாறன் மழவன்' என எழுதப்பட்டுள்ளது. "மாறன்' என்ற பெயர் பாண்டியர் மரபிற்குரிய பெயராகும். இந்தப் பெயர் தொண்டை நாட்டில் கிடைப்பது புதுமையானது. "மாறன்' என்ற பெயர் தலைமை பெற்றிருப்பவனைக் குறிக்கும். "மழவன்' என்பது இளம் வீரனைக் குறிக்கும். அந்த வகையில், இக்கல்வெட்டும் இளம் வீரனைக் குறிப்பிடுகின்றன. மூன்றாம் கல்வெட்டில் "தி' என்ற எழுத்து மட்டும் படிக்க முடியும் நிலையில் உள்ளது என்றார் அவர். 

இந்தக் கல்வெட்டுகளை தொல்லியல் துறைக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அத்துடன், பகவதிமலையை தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் வலியுறுத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com