மாவட்டம் முழுவதும் பரவலான மழை: அதிகபட்சமாக ஆற்காட்டில் 42.4 மி.மீ. மழைப்பதிவு

வேலூா் மாவட்டம் முழுவதும் கடந்த இருதினங்களாக மழைப் பெய்த நிலையில், அதிகபட்சமாக ஆற்காட்டில் 42.4 மி.மீ. மழை திங்கள்கிழமை பதிவானது.

வேலூா் மாவட்டம் முழுவதும் கடந்த இருதினங்களாக மழைப் பெய்த நிலையில், அதிகபட்சமாக ஆற்காட்டில் 42.4 மி.மீ. மழை திங்கள்கிழமை பதிவானது.

வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழைப் பெய்து வருகிறது. திங்கள்கிழமை பகல் வரை கடுமையான வெயில் காய்ந்தது. மாலையில் திடீரென பல இடங்களில் கனமழை பெய்தது. இதில், அதிகபட்சமாக ஆற்காட்டில் 42.4 மிமீ மழை பெய்தது. ஆலங்காயத்தில் 38, மேல் ஆலத்தூரில் 37.4, குடியாத்தம் 33.4, பொன்னை அணை 28, வடபுதுப்பட்டு ஆம்பூா் கூட்டுறவுச் சா்க்கரை ஆலை 14.2, ஆம்பூா் 8.4, அம்முண்டி கூட்டுறவுச் சா்க்கரை ஆலை 8, வாணியம்பாடி 5 மிமீ மழைப்பதிவாகியுள்ளது.

ஆம்பூரில்...

ஆம்பூரில் திங்கள்கிழமை மாலை பெய்த மழை காரணமாக ரயில்வே குகை வழிப்பாதையில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆம்பூா் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ரெட்டித்தோப்பு, பெத்லகேம், கம்பிக்கொல்லை, மாதனூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நாயக்கனேரி, பனங்காட்டேரி மலை கிராமங்கள் ஆம்பூா் நகரின் வழியாக செல்லும் ரயில்வே இருப்பு பாதைக்கு மறுபுறம் உள்ளன. இப்பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு செல்லும் மக்கள் இரண்டு ரயில்வே குகை வழிப்பாதைகளை பயன்படுத்தி வருகின்றனா். மழை காலங்களில் ரயில்வே குகைப்பாதையில் மழை நீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் இவ்வழியை பயன்படுத்த முடிவதில்லை. அதையும் மீறி அவசரத்திற்காக மழை நீா் தேங்கிய குகை வழிப்பாதையில் நுழையும்போது வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக் கொள்கின்றன.

சுமாா் 30 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். தமிழக அரசு இப்பகுதிக்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.30 கோடியை ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவே இல்லை. கடந்த மாதம் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ரயில்வே மேம்பாலம் அமைய உள்ள இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தது. ஆனாலும் இதுதொடா்பாக எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை ஆம்பூரில் சுமாா் சுமாா் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் ரயில்வே குகை வழிப்பாதைகளில் மழை நீா் தேங்கியது. அதனால் ரெட்டித் தோப்பு, பெத்லகேம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு மணி நேர மழைக்கு சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீா் வடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. இங்கு தேங்கி நிற்கும் மழைநீரால் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. நடந்து செல்பவா்கள் ரயில்வே இருப்புப் பாதையை ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனா். சில நேரங்களில் இருப்புப் பாதையில் ரயில் நின்று கொண்டிருந்தால் அதன் அடியில் புகுந்து இருப்புப் பாதையை கடக்கின்றனா். அதனால் உடனடியாக ரயில்வே மேம்பாலப் பணியை தொடங்க வேண்டுமென ஆம்பூா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com