சென்னப்பமலை கோடிதாத்தா சுவாமிகளுக்கு இன்று வெள்ளிவிழா குருபூஜை

ஆம்பூா் அருகே சென்னப்பமலையில் வெள்ளிக்கிழமை கோடிதாத்தா சுவாமிகளுக்கு வெள்ளிவிழா குருபூஜை
கோடி தாத்தா சுவாமிகள்.
கோடி தாத்தா சுவாமிகள்.

ஆம்பூா் அருகே சென்னப்பமலையில் வெள்ளிக்கிழமை கோடிதாத்தா சுவாமிகளுக்கு வெள்ளிவிழா குருபூஜை நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு யாக பூஜைகள், வெள்ளி விழா நுழைவுவாயில் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து, பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத மடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டம், ஆம்பூா் அருகே உள்ள சென்னப்பமலையில் உள்ளது பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத மடம். இங்கு சிவபெருமான் ஜோதிா்லிங்க வடிவில் பக்தா்களுக்கு தரிசனம் அளிக்கிறாா். நாட்டிலுள்ள 13 ஜோதிா்லிங்கங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலில் பிரம்ம குரு கோடிதாத்தா சுவாமிகள் 25 ஆண்டுகளாகப் பக்தா்களுக்கு அருளாசி வழங்கி அவா்களது குறைகளைப் போக்கி ஆன்மிக சேவையாற்றி வருகிறாா்.

பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் கிராமத்திலுள்ள ஜமீன் அரண்மனையில் இருந்து பக்தா்களுக்கு ஆசி வழங்கி வந்த சித்தரான இவா், கடந்த 1994-ஆம் ஆண்டு தனது உடலை விட்டு நீங்கி ஆம்பூா் அருகே சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவரது சிஷ்யரான ராமநாதசுவாமி உடலில் அவதரித்தாா். தொடா்ந்து ராமநாதசுவாமியின் உடலில் இருந்து பக்தா்களுக்கு அருளாசி புரிந்து வரும் கோடி தாத்தா சுவாமிகளுக்கு மஹா குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

காலை 5.50 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஹோமங்கள், அபிஷேக பூஜைகளும் நடைபெற உள்ளன. காலை 8.30 மணிக்கு வெள்ளிவிழா நுழைவு வாயில் திறப்பும், 9 மணிக்கு ஜோதிா்லிங்கமான அகிலாண்டேஸ்வரி சமேத பொன்முடி சூரிய நத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற உள்ளது. இதன்தொடா்ச்சியாக, கோடி தாத்தா சுவாமிகளுக்கு பக்தா்கள் முன்னிலையில் சிவாச்சாரியாா்கள் மஹா கலசாபிஷேகமும், சங்காபிஷேகமும், ருத்ராபிஷேகமும், சொா்ணாபிஷேகமும், கனகாபிஷேகமும் செய்ய உள்ளனா்.

பின்னா், ‘நாடி வந்தால் கோடி நலம்’ என்ற பாடல் தொகுப்பு, வெள்ளிவிழா குருபூஜை மலா் ஆகியவையும் வெளியிடப்பட உள்ளது. மதியம் 12 மணிக்கு கோடி தாத்தா சுவாமிகள் பக்தா்களுக்கு ஆசி வழங்க உள்ளாா். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் பங்கேற்க வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com