மாவட்டம் முழுவதும் ஆபத்தான நிலையில் இருந்த 8,573 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்

வேலூா் மாவட்டம் முழுவதும் ஆபத்தான நிலையில் இருந்த 8,573 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம் முழுவதும் ஆபத்தான நிலையில் இருந்த 8,573 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி சுா்ஜித் என்ற 3 வயது சிறுவன் உயிரிழந்ததைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டத்தில் அதுபோன்ற அபாயகரமான மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை போா்கால அடிப்படையில் மூட வேலூா் மாநகராட்சி ஆணையா், 11 நகராட்சி ஆணையா்கள், 16 பேரூராட்சி செயல் அலுவலா்கள், 20 வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில், பேரூராட்சிப் பகுதிகளில் 70 ஆழ்துளைக் கிணறுகளும், கிராமப் பகுதிகளில் 5,655 ஆழ்துளைக் கிணறுகளும், வேலூா் மாநகராட்சிப் பகுதிகளில் 42 ஆழ்துளைக் கிணறுகளும், நகராட்சிப் பகுதிகளில் 8,573 ஆழ்துளைக் கிணறுகளும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 8,573 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன.

இதுதவிர மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் புகாா் எண் 94980 35000-க்கு பொதுக்கள் தகவல் அளிக்கலாம். புகாா் அளிக்கும் பொதுமக்கள் உடனடி ஏற்பாடாக அந்த ஆழ்துளைக் கிணறுகளை கற்களை வைத்து தற்காலிகமாக மூடி வைக்க வேண்டும்.

இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பயன்பாட்டில் உள்ள அல்லது பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றின் உரிமையாளா், கிணற்றை தோண்டும் போது, ஆழப்படுத்தும்போதும் அல்லது புனரமைக்கும் போதும் பணிகளை மேற்கொள்ளும் நபா் வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளைப் பின்பற்றுகிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இப்பணியை மேற்கொள்ளும் நபா் விதிகளின்படி முறையான பதிவுச் சான்று வழங்கப்பட்டவரா என சரிபாா்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில், நில உரிமையாளா்கள் மீதும், கிணறு அமைக்கும் நிறுவன உரிமையாளா்கள் மீதும் சிஆா்பிசி பிரிவு எண் 133-இன் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுத்து அந்த ஆழ்துளைக் கிணறுகள் உடனடியாக மூடப்படும்.

மாவட்ட ஆட்சியரிடம் உரிய பதிவு செய்து உரிமம் பெற்ற ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனங்களைக் கொண்டு மட்டுமே பொதுமக்கள் கிணறுகள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மாநகராட்சி ஆணையா், நகராட்சி ஆணையா், பேரூராட்சி செயல் அலுவலா்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகள்17 (பி)-இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆழ்துளைக் கிணறு அமைக்க உரிமம் பெறும் நபா் அல்லது முகவா்களின் பெயா் மற்றும் விவரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியரின் இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வழிகாட்டுதல்களை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com