மேல்பட்டி ரயில் நிலையத்தில் பயணிகள் தர்னா

மேல்பட்டி ரயில் நிலையத்தில் நடைபாதை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த  சரக்கு ரயிலை

மேல்பட்டி ரயில் நிலையத்தில் நடைபாதை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த  சரக்கு ரயிலை அகற்ற வலியுறுத்தி ரயில் பயணிகள் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். 
மேல்பட்டி ரயில் நிலையத்தில், ஏலகிரி எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை-அரக்கோணம் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் என தினமும் 4 ரயில்கள் நின்று செல்கின்றன. மேல்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள செண்டத்தூர், கீழ்ப்பட்டி, குளிதிகை, நாவிதம்பட்டி, வடபுதுப்பட்டு, தோட்டாளம், சாந்தி நகர், வெங்கிலி, எம்.வி.குப்பம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் செல்கின்றனர்.
சென்னையிலிருந்து, மகாராஷ்டிர மாநிலம் சென்ற 38 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று கடந்த 10 நாள்களுக்கு முன் என்ஜின் பழுதடைந்ததால், மேல்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடைபாதை பகுதியில் பழுதடைந்த சரக்கு ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால், ரயிலில் இருந்து பயணிகள் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் சிரமமாக உள்ளதாம். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 
பழுதடைந்த சரக்கு ரயிலை அங்கிருந்து அகற்றுமாறு பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பயனில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் வியாழக்கிழமை காலை  7.45 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் சென்ற ரயிலை மறித்து தர்னாவில் ஈடுபட்டனர். 
அவர்களை ரயில் நிலைய அலுவலர் கலைவாணன் சமரசம் செய்தார். சரக்கு ரயிலை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 
இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது. மதியம் ஜோலார்பேட்டையில் இருந்து என்ஜின் கொண்டு வரப்பட்டு, பழுதடைந்த சரக்கு ரயிலில் பொருத்தப்பட்டு, அந்த ரயில் சென்னைக்கு சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com