தூய்மை இந்தியா திட்டப்பணியில் வேலூர் மாநகராட்சி முதலிடம்: மத்திய இணைச் செயலர் தகவல்

தூய்மை இந்தியா திட்டப்பணிகளில் தமிழக அளவில் வேலூர் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளதாக திட்டத்தின் மத்திய இணைச் செயலர் வி.கே.ஜிந்தால்


தூய்மை இந்தியா திட்டப்பணிகளில் தமிழக அளவில் வேலூர் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளதாக திட்டத்தின் மத்திய இணைச் செயலர் வி.கே.ஜிந்தால் தெரிவித்தார். 
வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்து சுயஉதவிக்குழு பெண்கள், அனைத்து அமைப்புகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் காட்பாடி காந்திநகரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். 
இதில், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட இணைச் செயலர் வி.கே.ஜிந்தால் பேசியதாவது: 
மனிதர்களால் மட்டுமே குப்பைகள் உருவாக்கப்படுகின்றன. மிருகங்கள் குப்பைகளை உருவாக்குவதில்லை. மனிதன் ஓரிடத்தில் 2 நிமிடம் இருந்தால் 5 கிராம் குப்பைகளை உருவாக்குகிறான். எவரெஸ்ட் சிகரத்துக்கு சென்றாலும் அங்கும் குப்பைகளை உருவாக்குகின்றனர். குப்பைகள் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. இதனைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
தமிழகத்திலேயே தூய்மை இந்தியா திட்டப்பணியில் வேலூர் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. தூய்மை மாநகராட்சியாக வேலூர் திகழ்கிறது. குப்பைகளைத் தரம் பிரித்து அதில் காய்கறிகள், வீணான உணவுப்பொருட்களைக் கொண்டு உரம் தயாரிக்கப்படுகிறது. 
இந்த நல்ல விஷயங்கள் குறித்து மற்ற மாநிலங்களுக்கும் கூறி வருகிறேன். வேலூர் மாநகராட்சி அதிகாரிகளும் மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கு செயல்படுத்தப்படும் நல்ல விசியங்களை இங்கு செயல்படுத்தலாம் என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டம், குப்பைகள் தரம் பிரிப்பதிலுள்ள நிறை, குறைகளை எடுத்துரைத்தனர். 
கூட்டத்தில், நகர்நல அலுவலர் மணிவண்ணன், பொலிவுறு நகர் திட்டப் பொறியாளர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com