மாவட்டம் முழுவதும் 1,020 பேனர்கள், விளம்பரப் பதாகைகள் அகற்றம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததையடுத்து, வேலூர் மாவட்டத்தில் விதிமுறை மீறி சாலைகளில் வைக்கப்பட்டிருந்த 1,020 பேனர்கள், விளம்பரப் பதாகைகளை அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினர்.


சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததையடுத்து, வேலூர் மாவட்டத்தில் விதிமுறை மீறி சாலைகளில் வைக்கப்பட்டிருந்த 1,020 பேனர்கள், விளம்பரப் பதாகைகளை அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினர்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியாளர் சுபஸ்ரீ(23) வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் எதிர்பாராத விதமாக அவர் மீது  விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 
இதையடுத்து, வேலூர் மாவட்டம் முழுவதும் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்றும்படி உள்ளாட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். 
அதன்பேரில், வேலூர் பழையப் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி நினைவுத் தூண், மக்கான் சிக்னல், மண்டி வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களிலும், சாலையின் மத்தியிலும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணி சனிக்கிழமை அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, வடக்கு போலீஸார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர்.
இதேபோல், காட்பாடி முதலாவது மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் உதவி ஆணையர் மதிவாணன் தலைமையில் அதிகாரிகள் வள்ளிமலை கூட்டு ரோடு, உழவர் சந்தை, ரயில்நிலையம், சித்தூர் பேருந்து நிறுத்தம், ஓடைபிள்ளையார் கோயில், சில்க் மில், விருதம்பட்டு ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 45-க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, மாநகரில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான விளம்பர பதாகைகளும் அகற்றபப்பட்டன. இதேபோல், மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர பதாகைகளும் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஆம்பூரில்...
ஆம்பூர் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் சனிக்கிழமை அகற்றினர்.  சிலர் முன்னறிவிப்பு இன்றி பேனர்களை அகற்றக் கூடாது என நகராட்சி ஆணையரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதியில்லாத பேனருக்கு முன்னறிவிப்பு அளிக்க வேண்டியதில்லை என்றும்,  தாங்களாகவே பேனர்களை அகற்றிக் கொள்ள வேண்டும்.  இல்லையெனில் நகராட்சி நிர்வாகமே பேனர்களை அகற்றும் என்று ஆணையர் தெரிவித்தார்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளை நகராட்சி மற்றும் வருவாய்துறையினரால் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
வட்டாட்சியர் இரா.அனந்தகிருஷ்ணன் தலைமையில், திருப்பத்தூர் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பதாகைகளை நகராட்சி மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் அகற்றினர். பதாகைகளை அகற்றும்போது, விளம்பரதாரர்களுக்கும்,  வருவாய்த்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆற்காடில்...
ஆற்காடு நகரின்  பல இடங்களில்அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள்  வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
ஆற்காடு நகரில், உரிய அனுமதியின்றி அண்ணாசாலை, புதியவேலூர் சாலை, பேருந்து நிலையம், ஆரணிசாலை, கண்ணமங்கலம் கூட்ரோடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில்  வைக்கப்பட்டிருந்த பல்வேறு பேனர்களும், பதாகைகளும் அகற்றப்பட்டன. ஆற்காடில், அனுமதியின்றி பேனர் வைத்திருந்த சிலர் தாமாக முன்வந்து  அகற்றிக் 
கொண்டனர். 
இதேபோல, ராணிப்பேட்டை, அரக்கோணம், குடியாத்தம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விளம்பர பாதாகைகள் அகற்றப்பட்டன. 
ஒரேநாளில் 1,020 பேனர்கள் அகற்றம் 
வேலூர் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை ஒரேநாளில் 1,020 பேனர்கள், 20 விளம்பர பதாகைகள், 130 நெகிழ்வு பதாகைகள் அகற்றப்பட்டன. இதில், வேலூர் மாநகராட்சி பகுதியில் 98 பேனர்களும், 8 விளம்பர பதாகைகளும், 12 நெகிழ்வு பதாகைகளும் அடங்கும். இந்த பேனர், விளம்பர பதாகைகளை சட்டவிரோதமாக வைத்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வருங்காலங்களில் அனுமதியின்றி பேனர், சுலோக பதாகைகள் வைக்கப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com