காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு: எம்பி கதிர்ஆனந்த் தகவல்

பழுதடைந்த காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு

பழுதடைந்த காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால் விரைவில் மேம்பால சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் என்று வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் தெரிவித்தார்.
காட்பாடி - சித்தூர் சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது இந்த ரயில்வே மேம்பாலம் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதனைச் சீரமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை தென்னக ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் பி.மகேஷ், சென்னை ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு தலைவரும், வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிர்ஆனந்த் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
பின்னர், கதிர்ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் காட்பாடி ரயில்வே மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலம் தற்போது பல்வேறு காரணங்களால் பழுதடைந்து விட்டது. இதனை புதிய தொழில்நுட்பமான கார்பன் பைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சீரமைக்க உள்ளோம். மேம்பாலம் 3 அல்லது 4 மாதங்களுக்குள் சீரமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்படும். இதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். மேம்பாலப் பணிகள் நடைபெறும்போது கனரக வாகனங்கள் இந்த வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. 
சுங்கச்சாவடிக் கட்டணத்தை தவிர்க்க குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி வழியாக காட்பாடிக்கு வாகனங்கள் வருகிறது. இந்த வாகனங்களை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்கள் வள்ளிமலை கூட்டுரோடு வழியாக அனுப்பப்படும். இதற்கான தகவல் பலகை வைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காட்பாடி ரயில்நிலையத்தை மேம்படுத்த கோரிக்கை வைத்துள்ளேன். 
மேலும், வடுகன்தாங்கல் - விரிஞ்சிபுரம் இடையே ரயில்பாதையின் குறுக்கே உள்ள சாலையும் சீரமைக்கப்படும். காட்பாடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. காட்பாடி ரயில்நிலையத்தில் நவீன முறையில் பார்க்கிங் வசதி செய்யப்படும். ப்ரீபெய்டு ஆட்டோ சேவையை 5 கி.மீ. தொலைவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆய்வின்போது, வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பா.கார்த்திகேயன், காட்பாடி ரயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், முன்னாள் மண்டல குழுத் தலைவர் சுனில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com