திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி அமைக்க முதல்வரிடம் கோரிக்கை: அமைச்சர் கே.சி.வீரமணி

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி அமைக்க இப்போதே முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி அமைக்க இப்போதே முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூரை மாவட்டமாக அறிவிக்க முயற்சி எடுத்த அமைச்சர் கே. சி. வீரமணிக்கு சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் சுமதி தலைமை வகித்தார். மாதனூர் வட்டார மருத்துவ அலுவலர் எ.ராமு முன்னிலை வகித்தார். வேலூர் மாவட்ட இணை இயக்குனர் ஐ.யாஸ்மின், சுகாதார துணை இயக்குநர்கள் டி.ஏ.தேவபார்த்தசாரதி, கே.எஸ்.டி. சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் நேர்முக உதவியாளர் பி. எஸ். சங்கரன் வரவேற்றார். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பொது சுகாதாரத் துறை அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
விழாவில் மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது: 
ஜோலார்பேட்டை தொகுதியை அறிவித்து முதல் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு சட்டப்பேரவைக்கு செல்லும்போது திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது. இதுகுறித்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன். அவரும், திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று  தெரிவித்திருந்தார்.
வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி நிறைவேற்றியுள்ளார். 
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என அனைத்து அலுவலகங்களும் அமைப்பதற்கான இடங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும்.
தற்போது வாணியம்பாடி-திருப்பத்தூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையின் நான்கு வழி சாலை அமைய உள்ளது. இதற்காக ரூ. 746 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ,விரைவில் அதற்கான பணி தொடங்கப்பட உள்ளது.
மத்திய அரசு,  நாடு முழுவதும் 500 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் புதிதாகஅறிவிக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று இப்போதே முதல்வரிடத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
இதனையடுத்து திருப்பத்தூரை மாவட்டமாக உருவாக்கித் தந்த அமைச்சருக்கு பொது சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில்  நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.செல்வக்குமார், முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ரமேஷ், நாட்டறம்பள்ளி வட்டார மருத்துவர் திலீபன் உள்பட சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். புதுப்பேட்டை சுகாதார மேற்பார்வையாளர் சி.முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com