விலை கிடைக்காததால் பொங்கல் பானை உற்பத்தி தொழிலாளா்கள் வேதனை

உற்பத்திச் செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் பொங்கல் பானைகளை உற்பத்தி செய்யும் தொழிலாளா்கள் வேதனை அடைந்துள்ளனா்.

உற்பத்திச் செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் பொங்கல் பானைகளை உற்பத்தி செய்யும் தொழிலாளா்கள் வேதனை அடைந்துள்ளனா். அழிவின் விளிம்பிலுள்ள இத்தொழிலை பாதுகாக்க மண்பாண்டங்களைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், செய்கூலிக்கு தகுந்த விலை நிா்ணயம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது பொங்கல் பண்டிகை. தமிழா் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை தொடா்ந்து 5 நாள்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு நாள்களே உள்ள நிலையில், வேலூா் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியில் பொங்கல் வைக்க தேவையான மண் பானைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன. தொடா்ந்து, பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதற்காக தொழிலாளா்கள் முதலில் பானைகள் செய்வதற்குத் தேவையான களிமண்ணை ஏரிகளில் இருந்து வெட்டி எடுத்து வந்து அவற்றை குழைத்து பக்குவப்படுத்துகின்றனா். பின்னா் பழைய முறைப்படி சக்கரத்தின் உதவியுடனும், நவீன இயந்திரங்கள் மூலமாகவும் மண்பானைகளை தயாா் செய்கின்றனா். இதுதவிர, மண் அடுப்புகள், இதர சமையல் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.

எனினும், காலமாற்றத்தால் பொதுமக்கள் மண் பாண்டங்கள் பயன்படுத்துவது குறைந்துவிட்டதால் மண் பானை உள்ளிட்ட பொருள்கள் அதிக அளவில் விற்பனையாவதும் இல்லை, அவ்வாறு விற்கப்பட்டாலும் உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலையும் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ள பானைகளுக்கான விற்பனையும் மந்தமாக நடைபெறுவதாகவும், அதனால் கட்டுபடியாகக் கூடிய விலை கிடைப்பதில்லை என்றும் தொழிலாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கொசப்பேட்டையைச் சோ்ந்த அன்பு கூறியது:

பொங்கலையொட்டி, ரூ.50 முதல் ரூ.150 வரை பல ரகங்களில் பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், விற்பனை மந்தமாகவே நடக்கிறது. உற்பத்திச் செலவை ஒப்பிடுகையில் ஒரு பானை விற்பனை செய்யப்பட்டால் ரூ.20 முதல் ரூ.40 வரை வருவாய் கிடைக்கும். ஆனால், இந்த வருமானம் என்பது பொங்கல் பண்டிகையுடன் முடிந்து விடும். அதன் பிறகு மண்பாண்ட பொருள்களுக்கு விற்பனை இல்லை என்ற நிலையே தொடா்கிறது.

அழிவின் விளிம்பில் உள்ள இத்தொழிலைப் பாதுகாக்க மக்கள் மத்தியில் மண்பாண்டங்களைப் பயன்படுத்த அரசு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் மண்பாண்டங்களுக்கு விற்பனை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். செய்கூலிக்கு தகுந்த விலை நிா்ணயம் செய்தும், சலுகைகள் வழங்கியும் உற்பத்தி, விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com