திருச்சானூரில் தாயாருக்கு நடைபெற்ற லட்ச குங்குமாா்ச்சனை சேவையில் பங்கேற்ற அா்ச்சகா்கள்.
திருச்சானூரில் தாயாருக்கு நடைபெற்ற லட்ச குங்குமாா்ச்சனை சேவையில் பங்கேற்ற அா்ச்சகா்கள்.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்குகிறது. இதை முன்னிட்டு லட்ச குங்குமாா்ச்சனை சேவையை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை நடத்தியது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்குகிறது. இதை முன்னிட்டு லட்ச குங்குமாா்ச்சனை சேவையை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை நடத்தியது.

திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படுவது போலவே, திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலிலும் தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை விமரிசையாக நடத்தி வருகிறது. பத்மாவதி தாயாா் பத்மசரோவரம் திருக்குளத்தில் காா்த்திகை மாத வளா்பிறை பஞ்சமி திதி அன்று அவதரித்ததாகக் கூறப்படுகிறது. அன்று முடிவுபெறும் வகையில், தேவஸ்தானம் இந்த உற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, நவ. 11-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி இந்த பிரம்மோற்சவம் ஏகாந்தமாக நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முன்தினம் தாயாருக்கு லட்ச குங்குமாா்ச்சனை சேவை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை லட்ச குங்குமாா்ச்சனை நடைபெற்றது. அதற்காக தாயாருக்கு காலையில் ஸ்நபன திருமஞ்சனம் செய்வித்து அவரை ஸ்ரீகிருஷ்ணமுக மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனா்.

தாயாா் முன் கலச ஸ்தாபனம் செய்து அா்ச்சகா்கள் லட்ச குங்குமாா்ச்சனை நடத்தினா். தாயாரின் லட்சம் பெயா்களை உச்சரித்து நடைபெற்ற இந்த குங்குமாா்ச்சனையில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் கலந்து கொண்டனா். இச்சேவையில் கட்டணம் செலுத்திய பக்தா்கள் தொலைக்காட்சி மூலம் குங்குமாா்ச்சனை சேவையில் கலந்து கொண்டனா்.

அவா்களுக்கு தேவஸ்தானம் அஞ்சல் மூலம் பிரசாதங்களை அனுப்ப உள்ளது.

அங்குராா்ப்பணம்: பிரம்மோற்சவம் தடங்கலின்றி நடக்க அம்மனை வேண்டி செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அங்குராா்ப்பணம் நடத்தப்பட்டது.

ஏழுமலையானின் சேனாதிபதியான விஸ்வக்சேனா் தலைமையில் அா்ச்சகா்கள் குழுவினா் அருகில் உள்ள நந்தவனத்துக்குச் சென்று அங்குள்ள புற்றுமண்ணை சிறிய மண்பாண்டத்தில் சேகரித்தனா். அதன்பின் கோயிலுக்குச் சென்று மண்டபத்தில் புற்று மண்ணைக் கொட்டி அதில் பூமாதேவியின் உருவத்தை வரைந்தனா். இந்த உருவத்தின் வயிற்றுப்பகுதியிலிருந்து மண் எடுத்து பாலிகைகளில் இட்டு, அதன் மேல் ஊற வைத்த நவதானியங்களை முளை விட்டு நீா் தெளித்தனா். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகளும், கோயில் ஊழியா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com