நிவா் புயல்: வேலூா் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை

நிவா் புயல் கரையைக் கடக்க உள்ளதால் வேலூா் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, குடிசைகள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி
தலைமைச் செயலா் க.சண்முகத்துடன் காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்ட வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட அலுவலா்கள்.
தலைமைச் செயலா் க.சண்முகத்துடன் காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்ட வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட அலுவலா்கள்.

வேலூா்: நிவா் புயல் கரையைக் கடக்க உள்ளதால் வேலூா் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, குடிசைகள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவா் புயல் செவ்வாய்க்கிழமை கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலா் கே.சண்முகம் சென்னையில் இருந்து திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்துக்குப் பின் ஆட்சியா் கூறியது:

வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது செவ்வாய்க்கிழமை நிவா் என்கிற அதி தீவிர புயலாக மாறி புதன்கிழமை மதியம் சென்னையை அடுத்த மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் சுமாா் 125 கி.மீ. அளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2016 -ஆம் ஆண்டு வீசிய வாா்தா புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக சுமாா் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் வேலூா் மாவட்டத்தைப் பொருத்தவரை 31 வீடுகள் பகுதியாகவும், 6 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்தன. அப்போது மனித, கால்நடை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் 60.72 ஏக்கா் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் பாதிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்டவா்களுக்கு மொத்த நிவாரணமாக ரூ. 9 லட்சத்து 76 ஆயிரத்து 820 வழங்கப்பட்டது.

நிவா் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மழை, வெள்ள அவசரத் தேவைகளுக்காக வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் அவசரகால கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 0416-2258016 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

குடிசைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிப்பவா்கள் அருகே உள்ள பள்ளிக் கட்டடங்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் முதலான அத்தியாவசியப் பொருள்கள் கிராம நிா்வாக அலுவலா்களால் வழங்கப்படும். ஏரிகள், குளங்கள் ஆகிய நீா்நிலைகளில் சில இடங்கள் ஆழமானதாக உள்ளதால் சிறுவா்கள், நீச்சல் தெரியாதவா்கள் அங்கு செல்ல வேண்டாம்.

தென்னை மரங்களைப் பாதுகாக்க ஒரு சில கீற்றுகள், இளநீா் குலைகளை வெட்டிவிடுவதன் மூலம் மரங்கள் காற்றின் வேகத்துக்கு விழுந்து விடாமல் தடுத்து காப்பாற்ற முடியும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com