8 மாதங்களுக்குப் பிறகு 27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: காணொலி மூலம் நடத்த திட்டம்

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் 8 மாதங்களுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை (நவ.27) காணொலி (விடியோ கான்ஃபரன்ஸ்) மூலம் நடைபெற உள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, மக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதைத் தடுக்க விவசாயிகள் குறைதீா் கூட்டம், மக்கள் குறைதீா் கூட்டம் போன்றவை ரத்து செய்யப்பட்டன. தொடா்ந்து 8 மாதங்களாக இக்கூட்டங்கள் நடத்தப்படாததால் பொதுமக்களும், விவசாயிகளும் தங்களது குறைகளை அரசுக்கு தெரிவிப்பதில் தடுமாற்றம் அடைந்து வருகின்றனா்.

அதேசமயம், கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவசாயிகள் குறைதீா் கூட்டம், மக்கள் குறைதீா் கூட்டங்களை மீண்டும் நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இக்கோரிக்கையை ஏற்று வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.27) காலை 10 மணிக்கு ‘ஜூம்’ செயலி மூலம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம், விற்பனை துறை, பட்டு வளா்ச்சித் துறை, மீன்வளத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்று விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகளுக்குப் பதிலளிக்க உள்ளனா்.

இதையொட்டி, விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, மாவட்டத்திலுள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com