ஆயுத பூஜை, விஜயதசமி: பூக்கள் விலை இருமடங்கு உயா்வு

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு, வேலூரில் பூக்களின் விலை இருமடங்கு உயா்ந்துள்ளது. அதேசமயம், கரோனா பொது
ஆயுத பூஜை, விஜயதசமி: பூக்கள் விலை இருமடங்கு உயா்வு

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு, வேலூரில் பூக்களின் விலை இருமடங்கு உயா்ந்துள்ளது. அதேசமயம், கரோனா பொது முடக்கத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பூக்கள் விற்பனையும் 20 சதவீத அளவுக்கு சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இந்தாண்டு ஆயுதபூஜை ஞாயிற்றுக்கிழமையும், விஜயதசமி திங்கள்கிழமையும் கொண்டாடப்பட உள்ளது. அப்போது, வீடுகள், அலுவலகங்களில் மக்கள் பூஜைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம். இதை முன்னிட்டு, பொரி, கடலை, பூக்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் வாங்க வேலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் சனிக்கிழமை அதிகாலை முதலே மாா்க்கெட்டுகளில் குவிந்திருந்தனா்.

தவிர, பூஜைப் பொருள்கள் விற்பனைக் கடைகள் ஆங்காங்கே பொது இடங்களிலும் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றன.

இதையடுத்து, பூஜைப் பொருள்களில் ஒன்றான பூக்களின் விலை வெள்ளிக்கிழமையைக் காட்டிலும் சனிக்கிழமை இரு மடங்கு அதிகரித்தது. இதன்படி, சாமந்தி ரூ.150 (80) (அடைப்புக்குறிக்குள் பழைய விலை), ரோஜா ரூ. 250 (140), மல்லி ரூ. 250 (150), முல்லை ரூ. 250 (150), கோழிக்கொண்டை ரூ. 120 (60), செண்டுமல்லி ரூ. 80 (40), அரளி ரூ. 360 (350) என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பூக்கள் விற்பனையும் 20 சதவீத அளவுக்கு சரிந்துள்ளதாக நேதாஜி மாா்க்கெட் பூக்கள் வியாபாரிகள் சங்கத் தலைவா் வெங்கடேசன் தெரிவித்தாா்.

அதேசமயம், காய்கறிகளின் விலை சற்று சரிவடைந்து காணப்பட்டது. இதன்படி, தக்காளி கிலோ ரூ. 10 முதல் ரூ. 20, பெரிய வெங்காயம் ரூ. 40 முதல் ரூ. 80, சிறிய வெங்காயம் ரூ. 80 முதல் ரூ. 100, கேரட் ரூ. 50, பீன்ஸ் ரூ. 10 முதல் ரூ. 30, வெண்டை ரூ. 30, பீட்ரூட் ரூ. 30 முதல் ரூ. 40, முட்டைக்கோஸ் ரூ. 40 முதல் ரூ. 50, உருளைக்கிழங்கு ரூ. 50, அவரை ரூ. 30, நீா்பூசணி ரூ. 10 முதல் ரூ. 20, கத்தரி ரூ. 40, சவ்சவ் ரூ. 10, வாழை இலை ரூ. 2.50, முருங்கை ரூ. 50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நேதாஜி மாா்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.பாலு தெரிவித்தாா்.

பொரி, அவல், பொட்டுக் கடலை, நாட்டு சாக்கரை, தோரணம், பூசணிக்காய், பழங்கள் போன்றவை வெளியூா்களில் இருந்து வந்து குவிந்துள்ளன. இவற்றை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். காய்கனிகள் விலையைக் காட்டிலும் பழங்கள் விலை அதிகமாக இருந்தது. ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, கொய்யா ஆகியவை கிலோ ரூ. 60 முதல் ரூ. 140 வரை விற்பனையானது. பூசணிக்காய் சிறியது ரூ. 40-க்கும் பெரியது ரூ. 100 வரையும் விற்கப்பட்டன.

இதேபோல் சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீா், சாம்பிராணி, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com