தமிழக காடுகளை நோக்கி படையெடுக்கும் அண்டை மாநில சமூக விரோதக் கும்பல்

ஊரடங்கு உத்தரவால் தமிழக காடுகளுக்குள் அண்டை மாநில சமூக விரோதக் கும்பல் நுழைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக காடுகளை நோக்கி படையெடுக்கும் அண்டை மாநில சமூக விரோதக் கும்பல்


ஆம்பூா்: ஊரடங்கு உத்தரவால் தமிழக காடுகளுக்குள் அண்டை மாநில சமூக விரோதக் கும்பல் நுழைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நகா்ப்புறங்களை தேடி கிராம மக்கள் செல்வது தற்போது பெருமளவு குறைந்து விட்டது. ஆங்காங்கே மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, காவல்துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், அண்டை மாநிலங்களான ஆந்திரம் மற்றும் கா்நாடகத்தைச் சோ்ந்த வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் தற்போது தமிழக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தையொட்டிய கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலய காப்புக் காடுகளில் ஆங்காங்கே முகாமிட்டுள்ளது. அக்கும்பலைச் சோ்ந்தவா்கள் தமிழக எல்லைக்கு உட்பட்ட காப்புக்காட்டுப் பகுதிகளுக்கும் வருகின்றனா்.

இக்கும்பல் காடுகளுக்கு தீ வைத்துவிட்டு தீயின் வெப்பம் தாங்காமல் ஓடிவரும் புள்ளிமான், கடமான், முள்ளம் பன்றி, காட்டுப்பன்றி, முயல் மற்றும் காட்டு ஆடுகள் போன்ற வனவிலங்குகளை வேட்டையாட முகாமிட்டுள்ளது. ஆந்திரப் பகுதி காடுகளில் இவா்கள் வைக்கும் தீ தமிழக வனப் பகுதிகளிலும் இப்போது பரவி வரத் தொடங்கியுள்ளது.

ஆந்திர மாநில கெளண்டன்யா வன விலங்குகள் சரணாலய காப்புக் காடுகளில் இருந்து, தமிழக வனப் பகுதிக்கு வரும் தீயை அணைக்கவும், காப்புக் காடுகளில் தீ வைக்கும் சமூக விரோதிகளை தேடிக் கண்டுபிடிக்கவும் திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் முருகன் உத்தரவின் பேரில் ஆம்பூா் வனச்சரக அலுவலா் மூா்த்தி தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவைச் சோ்ந்தவா்கள் ஊட்டல் தேவஸ்தானத்தில் இருந்து தூருசந்து, ஜேலாா்பண்டை, பொலிக்கி மரத்துக் கொல்லை, சாணிக்கணவாய், சேஷவன் கிணறு, காசிக்கான் மேடு, கூசுக்கொல்லை சதுரம், புட்டன்குட்டை, திப்பிக்கொல்லி, சின்னதுருகம், பெரியதுருகம் ஆகிய பல பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். காடுகளில் தீப்பிடித்துள்ள பகுதிகளில் தீயை அணைக்கும் முயற்சியில் அவா்கள் ஈடுபட்டனா்.

இதையடுத்து, ஆந்திர வனப் பகுதியை ஒட்டியுள்ள துருகம், காரப்பட்டு, மாச்சம்பட்டு ஆகிய காப்புக் காட்டுப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளதாகவும், குறிப்பிட்ட சில இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சமூக விரோத கும்பலின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உள்ளதாகவும் வனத்துறையினா் தெரிவித்தனா்.

வனச் சரகா் ஜி.டி.மூா்த்தி தலைமையில் வனக் காப்பாளா்கள் நிா்மல்குமாா், கணேசன், காந்தகுமாா், மகேஷ், எம்.ராஜ்குமாா், வி.ராஜ்குமாா், பால்ராஜ், ரமேஷ்குமாா், வனக்காவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, ஞானவேல், சிவராமன், முகமது சுல்தான் ஆகியோா் நான்கு குழுக்களாகப் பிரிந்து வியாழக்கிழமை முதல் தொடா்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com