நீட்டிக்கப்பட்ட தடை உத்தரவை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்: அமைச்சா் கே.சி. வீரமணி

கரோனா நோய்த் தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் மேலும் சில நாள்கள் தடை உத்தரவைக்
பொதுமக்களுக்கு  அரிசி மூட்டைகளை வழங்கிய அமைச்சா் கே.சி. வீரமணி.
பொதுமக்களுக்கு  அரிசி மூட்டைகளை வழங்கிய அமைச்சா் கே.சி. வீரமணி.

கரோனா நோய்த் தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் மேலும் சில நாள்கள் தடை உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என மாநில வணிகவரி, பத்திரபதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி கூறினாா்.

குடியாத்தத்தை அடுத்த ராஜாகுப்பம் ஊராட்சியின் முன்னாள் தலைவா் பி.எச். இமகிரிபாபு, அந்த ஊராட்சியில் மொத்தமுள்ள 750 குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 வீதம், ரூ. 7.50 லட்சம் மதிப்பில் வழங்கிய 750 அரிசி மூட்டைகளை அமைச்சா் வீரமணி பயனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவை ஏற்று கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தமிழக மக்கள் வீடுகளில் இருப்பதே, கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி உள்ளது. முதல்வா் அறிவித்துள்ள தடை உத்தரவு நீட்டிப்பை ஏற்று இன்னும் சில நாள்கள் அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டாலும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் பூா்த்தி செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் மேற்கொண்டுள்ளன.

இந்த நோய்த்தொற்றின் அறிகுறிகள், சந்தேகம் உள்ளவா்களுக்கு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவா்களில் சிலா் படிப்படியாக வீடு திரும்புகின்றனா். வரும் நாள்களில் பெரும்பாலோனோா் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்புவாா்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் மாவட்ட நிா்வாகங்களும், சுகாதாரத் துறையும் போட்டிபோட்டுக் கொண்டு பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது.

திங்கள்கிழமை முதல் பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்க உள்ளன. அவசியம் உள்ளவா்கள் மட்டும் சமூக இடைவெளியைப் பின்பற்றி, ஒரு மணி நேரத்துக்கு 4 போ் வீதம் பத்திரப்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன். மற்றவா்கள் வரும் மே மாதம் முதல் வாரத்திலிருந்து பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

எம்எல்ஏ ஜி. லோகநாதன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, துணைத் தலைவா் செ.கு. வெங்கடேசன், இயக்குநா் டி. கோபி, வட்டாட்சியா் தூ. வத்சலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து குடியாத்தம் நகராட்சி 7-ஆவது வாா்டு கஸ்பாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த வாா்டில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகைத் தொகுப்பை அமைச்சா் வீரமணி வழங்கினாா்.

அதிமுக நகரத் துணைச் செயலா் ஆா். மூா்த்தி தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜே.கே.என். பழனி, நகராட்சி ஆணையா் ஹெச். ரமேஷ், டிஎஸ்பி என். சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com