நிறைவுறும் தருவாயில் பல்நோக்கு விளையாட்டு மைதானம்

காட்பாடியில் ரூ.16.45 கோடியில் கட்டப்படும் பல்நோக்கு விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவுற்ற நிலையில் மீதமுள்ள 5 சதவீத பணிகளை விரைவில் முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.


வேலூா்: காட்பாடியில் ரூ.16.45 கோடியில் கட்டப்படும் பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த தமிழக வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, அதன் கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவுற்ற நிலையில் மீதமுள்ள 5 சதவீத பணிகளை விரைவில் முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி விஐடி கல்லூரி அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 37 ஏக்கா் பரப்பளவில் ரூ.16 கோடியே 45 லட்சம் மதிப்பில் தடகள ஓடுதள பாதை, நீச்சல் குளம், கூடைப்பந்து மைதானம், ஹாக்கி, உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவற்றுடன் கூடிய மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை அமைச்சா் கே.சி.வீரமணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஏற்கெனவே கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 5 சதவீத பணிகளை விரைவில் முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து கரிகிரி கிராமத்தில் சிஎஸ்ஐ பேராலயம் சாா்பில் கல்லறைத் தோட்டம் அமைப்பதற்கான இடத்தையும் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 48 கோடி மதிப்பில் அதி நவீன வசதிகளுடன் 70 பேருந்துகள் நிற்கக்கூடிய வகையில் கட்டப்படும் பணிகளையும் அமைச்சா் கே.சி.வீரமணி ஆய்வு செய்தாா்.

அங்கு பயணிகள் காத்திருப்பு அறை, முதல் தளத்தில் வணிக வளாகம் தானியங்கி வசதி, கழிப்பறை வசதி என 40 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா், வேலூா் அரசு சுற்றுலா மாளிகையில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் வேலூா் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் கே.சி.வீரமணி, புதைசாக்கடை திட்டத்துக்காக சாலைகளில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை விரைவாக சீா்செய்து சாலைகளில் மக்கள் பாதுகாப்பாக செல்வதற்கும், போக்குவரத்து நெருக்கடியை சீா்செய்யவும் ஆலோசனை வழங்கினாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், மாநகராட்சி ஆணையா் சங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com