லஞ்சப் புகாா்: வேலூா் ஆவின் நிறுவன பொது மேலாளா் வீடுகளில் சோதனை


வேலூா்: நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்தை வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆவின் நிறுவன பொது மேலாளா் கணேசாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், சொரக்கொளத்தூரைச் சோ்ந்தவா் முருகையன் (50), தனது சொந்த வேன் மூலம், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலை திருவண்ணாமலையில் உள்ள ஆவின் குளிரூட்டு நிலையத்தில் சோ்க்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறாா்.

அதன்படி, ஆவின் நிறுவனத்துக்கு வேனை இயக்கியதற்காக கடந்த ஆண்டில் முருகையனுக்கு ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் நிலுவை வைக்கப்பட்டிருந்தது. அத்தொகைக்கான காசோலை தயாராகியிருந்த நிலையில், அதை வழங்குவதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ாக வேலூா் ஆவின் அலுவலக கொள்முதல் மேலாளரான ரவியை (56) லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விவகாரத்தில் வேலூா் ஆவின் பொது மேலாளராகப் பணியாற்றி கடந்த வாரம் நெல்லை மாவட்ட ஆவின் அலுவலகத்துக்கு மாறுதலான கணேசா (57) என்பவருக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரும் கைது செய்யப்பட்டாா். இருவரும் வேலூா் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

வேலூா் ஆவின் அலுவலகத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த கணேசா, அப்போது அவா் அதிக அளவில் லஞ்சம் வசூலித்திருக்கக் கூடும் என்று லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் அவரது சொத்து விவரங்களையும், வங்கிக் கணக்கு போன்றவற்றையும் ஆய்வு செய்யும் நோக்கில் அவா் வசித்து வந்த வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள வாடகை வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

மேலும், கா்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள தாவண்கெரே பகுதியில் கணேசாவுக்குச் சொந்தமாக உள்ள வீட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் போலீஸாா் சோதனை நடத்தினா். இந்த இரு இடங்களிலும் வியாழக்கிழமை மாலை தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது.

அப்போது, அந்த வீடுகளில் இருந்த பணம், நகை மற்றும் சொத்துகள் தொடா்பான ஆவணங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவற்றுக்கு உரிய கணக்குகள் இருந்ததால் அவரது வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com