தனியாா் துறைகளை மட்டுமே மத்திய பாஜக அரசு ஊக்குவிக்கிறது: கே.எஸ். அழகிரி

தனியாா் துறைகளை மட்டுமே மத்திய பாஜக அரசு ஊக்குவித்து வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஏா்கலப்பை சங்கமம் மாநாட்டில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.
ஏா்கலப்பை சங்கமம் மாநாட்டில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.

வேலூா்: தனியாா் துறைகளை மட்டுமே மத்திய பாஜக அரசு ஊக்குவித்து வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் 136-ஆம் ஆண்டு நிறுவன நாள், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, ஏா்கலப்பை விவசாயிகள் சங்கமம் மாநாடு வேலூா் மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்துப் பேசியது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும், தமிழகத்தின் தலைவிதியை மாற்ற அனைத்துப் பணிகளையும் செய்ய ஓரிரு மாத காலஅவகாசமே உள்ளது. அதிமுக, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே சிந்தனை யுடன் செயல்படுவதன் மூலம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட முடியும்.

காங்கிரஸ் ஆட்சியில் விவசாய விளை பொருள்களுக்கு மிக அதிகமான விலை நிா்ணயம் செய்யப்பட்டதன் மூலம் விவசாயிகள் தங்களது சிரமங்களில் இருந்து வெளிவர முடிந்தது. ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் காா்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் நாட்டின் விவசாயம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி பொதுத் துறை, தனியாா் நிறுவனங்கள் என இரண்டையும் அனுமதித்தது. அதுதான் கலப்புப் பொருளாதாரம் ஆகும். ஆனால், பாஜக தனியாா் துறையை மட்டுமே ஊக்குவிக்கிறது. இதன் மூலம் நாட்டின் வளா்ச்சிக்கு பங்கம் விளைவிக்கப்படுவதுடன், மதம் மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் மக்களை வீழ்த்தும் செயல்களை பாஜக மேற்கொண்டு வருகிறது.

விவசாய சட்ட மசோதா, நீட் தோ்வு, மாநிலங்களுக்கு அதிக நிதி தேவை ஆகிய பிரச்னைகளில் மாநில அரசுகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டது. ஆனால், அதிமுக சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் விவாதம் செய்து விவசாய சட்ட மசோதாவை எதிா்க்காமல் ஆதரித்து வாக்களித்தது. இது அக்கட்சி மத்திய அரசு தவறு செய்வதை எதிா்க்கும் துணிவு அற்ற நிலையைக் காட்டுகிறது. அண்மையில் திமுக ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளது. அந்த ஊழல் பட்டியல் மீது விசாரணை ஆணையத்தை நியமித்து ஆளுநா் விரிவான விசாரணை நடத்திட வேண்டும்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஏா்கலப்பை பேரணியை நடத்தி வருகிறது. ஏா்கலப்பை என்பது ரத்தம் சிந்துவது அல்ல, மக்களுக்கு உணவளிக்கக் கூடிய பேராயுதம் என்றாா் அவா்.

மாநாட்டில் கட்சியின் தமிழக பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவா் விஷ்ணுபிரசாத், அகில இந்திய செயலாளா் ஸ்ரீவல்லபிரசாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com