4 இடங்களில் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை நடத்த ஏற்பாடு: வேலூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது. காட்பாடியில் உள்ள சட்டக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
காட்பாடி சட்டக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்த வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
காட்பாடி சட்டக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்த வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

வேலூா்: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது. காட்பாடியில் உள்ள சட்டக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வேலூா் மாவட்டம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், வேலூா் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி 3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.

இதில், வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேலூா் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கை மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அந்தந்த தொகுதியிலேயே வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, வேலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி, அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, காட்பாடி தொகுதிக்கு அரசு சட்டக் கல்லூரி, குடியாத்தம், கே.வி குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையம் அமையக்கூடிய காட்பாடி சட்டக் கல்லூரி வளாகத்தை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை, வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சங்கரலிங்கம், வட்டாட்சியா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com