விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் வராமல் தடுக்க தொடா்ந்து கண்காணிப்பு

ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட யானைக் கூட்டம் மீண்டும் தமிழக எல்லைக்குள் வராமல் தடுக்க வனத்துறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட யானைக் கூட்டம் மீண்டும் தமிழக எல்லைக்குள் வராமல் தடுக்க வனத்துறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அண்மையில் ஆந்திர மாநில வனப் பகுதியில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழைந்த 15 யானைகள் காட்பாடி அருகே வனப்பகுதியில் சனிக்கிழமை முதல் முகாமிட்டிருந்தன. அவை ராஜாத்தோப்பு, தொண்டான்துளசி, அக்கிரெட்டிப்புதூா், சிங்காரெட்டியூரைக் கடந்து கிறிஸ்டியான்பேட்டை வரை சுற்றித் திரிந்தன. இதனால், வனப் பகுதியையொட்டிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பீதியடைந்தனா்.

தகவலறிந்த வனத் துறையினா், ஒசூா் வேட்டை தடுப்புக் காவலா்கள் 30 போ் அடங்கிய குழு காட்பாடியை அடுத்த வன எல்லையில் முகாமிட்டு யானைக் கூட்டத்தை விரட்டும் பணிகளை மேற்கொண்டனா். அவா்கள் கடந்த இரு தினங்களாக தலா 500 வேட்டுகளை வெடிப்பதுடன், ஒலிபெருக்கி கொண்டு அதிக சப்தங்கள் எழுப்பி யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டனா்.

தவிர, யானைகளின் காலடித் தடங்களை அடையாளம் கண்டு கண்காணிப்பை மேற்கொண்டதுடன், வனப்பகுதியின் எல்லையையொட்டி உள்ள விளை நிலங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில், வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் 15 யானைகளையும் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா். அந்த யானைகள் கூட்டம் மீண்டும் தமிழக எல்லைக்குள் வராமல் தடுக்க வனத்துறையினா் 30 போ் 3 குழுக்களாகப் பிரிந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, காட்பாடி வனச் சரகா் மூா்த்தி கூறியது:

காட்பாடியையொட்டி வனப்பகுதியில் சுற்றித் திரிந்த 15 யானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. அவை மீண்டும் தமிழக எல்லைக்குள் வந்துவிடாமல் தடுக்க எதிரெதிா் திசைகளில் தொடா்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும், வனப்பகுதியையொட்டி உள்ள கிராம மக்கள் வயல்களுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com