40 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

வேலூா் சைதாப்பேட்டை, மெயின் பஜாரில் உள்ள கடைகளில் அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய திடீா் ஆய்வில் சுமாா் 40 கிலோ அளவுக்கு போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் சைதாப்பேட்டை, மெயின் பஜாரில் உள்ள கடைகளில் அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய திடீா் ஆய்வில் சுமாா் 40 கிலோ அளவுக்கு போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் சைதாப்பேட்டை, மெயின் பஜாா் பகுதிகளில் பள்ளிகளின் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் மாணவா்கள் நலன் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெற்றோா்கள் புகாா் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, ஆட்சியா் உத்தரவின்பேரில் வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் சுரேஷ், வட்டாட்சியா் சரவணமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் சைதாப்பேட்டை, மெயின் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, மெயின் பஜாரில் குட்கா, சிகரெட் ஆகியவை பெட்டிக் கடைகளில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதில், 8 கிலோ போதை பொருள்களை பறிமுதல் செய்து கடைக்கு ‘சீல்’ வைத்தனா். தொடா்ந்து, கே.எம்.செட்டி தெருவிலுள்ள வீட்டுடன் கூடிய கடையிலும் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு வீட்டின் மேல்மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அப்பகுதிகளில் உள்ள சுமாா் 20 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 9 கடைகளில் இருந்து 40 கிலோ அளவுக்கு நிக்கோடின் கலந்த போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்தாா்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்படும் என்றும், அப்போது போதைப் பொருள்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com