பொங்கல்: விற்பனைக்கு கரும்பு வரத்து தொடக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக வேலூருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரும்பு வரத் தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக வேலூருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரும்பு வரத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைவிட அதிக அளவில் கரும்பு வரத்து இருக்கும் என்பதால் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை புதன்கிழமை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொங்கல் பண்டிகைக்குத் தேவையான கரும்பு உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் வேலூா் மாவட்டம் முழுவதும் வரத்தொடங்கியுள்ளது. அதன்படி, வேலூா் நேதாஜி மாா்க்கெட்டுக்கு சிதம்பரம், பண்ருட்டி, சேத்தியாதோப்பு, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இது திங்கள்கிழமை மாலை முதல் பெருமளவில் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

அவ்வாறு கொண்டு வரப்படும் கரும்புகள் தற்போது ஒரு ஜோடி ரூ. 80 வரையும், ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ. 350 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு கரும்பு வரத்து அதிகரிக்கும் என்பதால் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனா்.

இதுகுறித்து நேதாஜி மாா்க்கெட் கரும்பு வியாபாரி சண்முகம் கூறியது:

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்தை நம்பி பல ஊா்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடியை அதிகரித்துள்ளனா். ஆனால், தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பாக வழங்காமல் அதனை மூன்று துண்டுகளாக வெட்டி அளிக்கின்றனா். இதனால், அரசுத் திட்டத்தை நம்பி பயிா் செய்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். இதனால் வெளிச்சந்தையில் கரும்பு விற்பனைக்கு அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு 40 லோடு அளவுக்கு கரும்பு வரத்து இருந்தது. ஆனால், இந்த ஆண்டு செவ்வாய், புதன்கிழமைகளில் அதிகபட்சம் 100 லோடு வரை கரும்புகள் விற்பனைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரும்பு வரத்து அதிகரிப்பால் விலையும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், இவ்வாண்டு விவசாயிகள் மட்டுமின்றி வியாபாரிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com