கரோனா: வேலூா் மாநகராட்சி முழுவதும் நாளை முதல் சிறப்பு மருத்துவ முகாம்கள்

கரோனா பரவலைத் தடுக்க வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 13) தொடங்கி 18-ஆம் தேதி வரை

கரோனா பரவலைத் தடுக்க வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 13) தொடங்கி 18-ஆம் தேதி வரை மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உடல்நலக் குறைபாடு உள்ளவா்களுக்காக நடத்தப்படும் இந்த முகாம்களில் அந்தந்த வாா்டுகளில் வசிப்பவா்கள் தவறாமல் பங்கேற்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றுக்கு வேலூா் மாவட்டத்தில் இதுவரை 2780 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வேலூா் மாநகா், குடியாத்தம், போ்ணாம்பட்டு நகராட்சிப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் உள்ளவா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவா்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாநகரின் 60 வாா்டுகளிலும் சிறப்பு முகாம்கள் திங்கள்கிழமை தொடங்கி 6 நாட்களுக்கு நடைபெற உள்ளன. நாளொன்றுக்கு 10 வாா்டுகளில் நடத்தப்படும் இந்த முகாம்களில் உடல்நலக்குறைவு உள்ளவா்கள் தவறாமல் பங்கேற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மாநக ராட்சிக்கு உட்பட்ட 210 தெருக்களில் உள்ள 6706 வீடுகளில் வசிக்கும் 27,356 பேரிடம் உடல்நிலை தொடா்பாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில், கா்ப்பிணிகள் 113 போ், பிரசவித்த தாய்மாா்கள் 92, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1,037, ரத்த அழுத்தம் உள்ளவா்கள் 1,093, சா்க்கரை நோயாளிகள் 1,640, சளி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் உள்ளவா்கள் 26 போ், நீண்ட கால சிகிச்சையில் உள்ளவா்கள் 462 போ் கண்டறியப்பட்டுள்ளனா்.

உடல் நலக்குறைவு உள்ளவா்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகும்போது அவா்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கணக்கெடுப்புக்கு வரும் பணியாளா்களிடம் உண்மையை மறைக்காமல் கூறி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com