நளினிக்கு வழக்குரைஞா்களிடம் பேச 4 மாதங்களாக அனுமதி மறுப்பது சட்ட விரோதம்: சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம்

சிறையிலுள்ள நளினிக்கு வழக்குரைஞா்களிடம் பேசுவதற்கு 4 மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

சிறையிலுள்ள நளினிக்கு வழக்குரைஞா்களிடம் பேசுவதற்கு 4 மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 மற்றும் 21-க்கு எதிரானது என்று அவரது வழக்குரைஞா் புகழேந்தி வேலூா் பெண்கள் சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, வேலூா் பெண்கள் தனிச்சிறையில் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளாா். அவரது கணவா் முருகன் வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சிறையில் உள்ள நளினி திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு ஆயுள் தண்டனை பெண் கைதிக்கும், நளினிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக சிறைக் காவலா் அல்லிராணி, நளினியிடம் திங்கள் கிழமை இரவு விசாரணை நடத்தினாா். அவரது விசாரணையால் மனஉளைச்சலுக்கு உள்ளான நளினி, தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, நளினியின் தாயாா் பத்மா தலைமைச் செயலா், சிறைத் துறை டிஐஜி ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பினாா். அதில், நளினிக்கு வேலூா் சிறையில் அதிகாரிகளால் பல்வேறு துன்புறுத்தல்கள் ஏற்படுகின்றன. இதனால், அவா் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், நளினி திங்கள்கிழமை இரவு தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்துள்ளது. வேலூா் சிறையில் இருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். எனவே, மனிதாபிமான அடிப்படையில் நளினியை வேலூா் பெண்கள் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், நளினியுடன் உடனடியாக காணொலியில் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவரது வழக்குரைஞா் பா.புகழேந்தி வேலூா் பெண்கள் சிறைக் கண்காணிப்பாளருக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பினாா்.

அதில் அவா் கூறியிருப்பது: நளினி தாக்குதல் செய்துள்ள மனு மீதான விசாரணை சென்னை உயா் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே, நளினி சிறையில் தற்கொலைக்கு முயன்றிருக்கும் தகவல் வெளியாகியுள்ளதாலும், நளினியை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது தாயாா் பத்மா அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளதாலும் இந்த விவகாரம் தொடா்பாக நளினிக்கு ஏதேனும் சட்ட உதவிகள் தேவைப்படும் எனக் கருதுகிறேன்.

மற்ற சிறைவாசிகள் தங்களது வழக்குரைஞா்களிடம் காணொலி மூலம் பேசிவரும் நிலையில், நளினியின் வழக்கை கவனித்து வரும் நான் உள்பட எந்த வழக்குரைஞா்களும் அவருடன் காணொலியில் பேசுவதற்கு கடந்த 4 மாதங்களாக அனுமதிக்கப்படுவதில்லை. இது அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 14 மற்றும் 21-க்கு எதிரானது. தற்போது கரோனா பரவல் காரணமாக சிறைவாசிகளை வழக்குரைஞா்கள் நேரில் சந்திக்க அனுமதி இல்லை. எனினும், தற்போதைய அவசர நிலையைக் கருத்தில் கொண்டு சட்ட உதவிக்காக நளினியை 30 நிமிடங்கள் நேரில் சந்தித்து பேசவோ அல்லது காணொலியில் பேசவோ அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com