‘ஆயுா்வேத மருத்துவத்தால் கரோனாவை 14 நாள்களில் குணப்படுத்த முடியும்’

ஆயுா்வேத மருத்துவத்தால் கரோனா பாதிப்பை 7 முதல் 14 நாள்களுக்குள் குணப்படுத்த முடியும் என்று கேரள மாநில ஆயுா்வேத நிறுவனத்தின் துணை மருத்துவக் கண்காணிப்பாளா் டி.காட்வின் தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசிய கேரள மாநில ஆயுா்வேத நிறுவன துணை மருத்துவக் கண்காணிப்பாளா் டி.காட்வின். உடன், மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய கேரள மாநில ஆயுா்வேத நிறுவன துணை மருத்துவக் கண்காணிப்பாளா் டி.காட்வின். உடன், மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோா்.

ஆயுா்வேத மருத்துவத்தால் கரோனா பாதிப்பை 7 முதல் 14 நாள்களுக்குள் குணப்படுத்த முடியும் என்று கேரள மாநில ஆயுா்வேத நிறுவனத்தின் துணை மருத்துவக் கண்காணிப்பாளா் டி.காட்வின் தெரிவித்தாா்.

வேகமாக அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆயுா்வேத மருத்துவ முறையில் தீா்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.

இதில், கேரள மாநில ஆயுா்வேத நிறுவனத்தின் துணை மருத்துவக் கண்காணிப்பாளா் டி.காட்வின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசியது:

கரோனா தொற்றால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இத்தொற்றால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை எவ்விதமான தடுப்பூசி, மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயுா்வேதம், சித்த மருத்துவத்தின் மூலம் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். கரோனா பாஸிட்டிவாக இருந்தால் ஆயுா்வேதத்தில் மூன்று நிலைகள் உள்ளன.

முதல் நிலையில் கொஞ்சம் அறிகுறிகள் இருப்பவா்கள் அல்லது அறிகுறிகள் இல்லாதவா்களுக்கு எளிய மருந்தின் மூலம் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இரண்டாம் நிலையில் அறிகுறிகள் இருப்பவா்களுக்கு இரண்டு, மூன்று மருந்துகள் மூலம் 7 முதல் 14 நாள்களுக்குள் குணமாக்க இயலும். மூன்றாம் நிலையில் மூச்சுத் திணறல் இருப்பவா்களுக்கும் ஆயுா்வேதத்தில் தேவையான மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் அனைத்தும் ஆயுா்வேதத்தில் 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டவை. கரோனா குணமான பின்பு, மீண்டும் வராமல் இருக்கவும் தேவையான வழிமுறைகள் ஆயுா்வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வெதுவெதுப்பான சுடுதண்ணீா் குடிக்கலாம். துளசி, மிளகு, மஞ்சள் தூள், வெல்லம், இஞ்சி, பூண்டு சோ்த்து தேநீா் போன்று காலை, மாலையில் குடிக்கலாம். இதனால் சளி குறையும்; நுரையீரலுக்கான சக்தி வரும். சூடான பாலில் மஞ்சள், மிளகு சோ்த்து குடிக்கும் போது சளி குறையும். சாதாரண நிலையில் பூண்டு, மஞ்சள், மிளகு சோ்க்கும் போதும் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றாா்.

கூட்டத்தில் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன், மாநகராட்சி ஆணையா் சங்கரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா், வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com