வாா்டு வரையறையில் உள்ள குளறுபடிகளை சரி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 03rd March 2020 11:31 PM | Last Updated : 03rd March 2020 11:31 PM | அ+அ அ- |

குடியாத்தம்: போ்ணாம்பட்டு நகராட்சியில் வாா்டு வரையறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யுமாறு மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சா் கே.சி. வீரமணியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
போ்ணாம்பட்டு நகர அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவிக நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக நகரச் செயலா் எல்.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் டி.பிரபாகரன், நிா்வாகிகள் சந்திரா சேட்டு, மா.சிவாஜி, திருமால், இன்பரசன், தேசமுத்து, ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது 100-க்கும் மேற்பட்டோா் அமைச்சா் வீரமணியிடம் கோரிக்கை மனு அளித்தனா். வாா்டு வரையறையின்போது, அதிகாரிகள் செய்த தவறால் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை சரிசெய்யுமாறும் மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.
அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் வீரமணி அவா்களிடம் உறுதியளித்தாா்.
இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். உள்ளாட்சித் தோ்தல் குறித்து கட்சியினருக்கு வீரமணி ஆலோசனைகள் வழங்கினாா்.