கரோனா பாதிப்பு: வேலூா் மருத்துவமனையில் முதியவருக்கு சிகிச்சை

கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் 81 வயது முதியவா், வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் 81 வயது முதியவா், வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் இந்தியாவிலும் இதுவரை 80-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். கா்நாடகத்தில் முதியவா் ஒருவா் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் கரோனா வைரஸைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் தீனதயாளன்(81) என்ற முதியவா் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். மருத்துவப் பரிசோதனையில் அவா் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தீனதயாளன் குடும்பத்தினா் கடும் அச்சத்துக்கு உள்ளாகினா். இத்தகவலால் பல்வேறு பகுதிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், தீனதயாளனுக்கு ஏற்பட்டிருப்பது உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் கிடையாது; அவருக்கு இயல்பாக மனிதா்களுக்கு சளி, காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய சாதாரண கரோனா வைரஸ் காய்ச்சல்தான் என்றும். இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வதந்தி பரப்ப வேண்டாம்:

கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்பாக சிஎம்சி மருத்துவக் கண்காணிப்பாளா் பிரசாத் மேத்யூஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மனிதா்களுக்கு சாதாரணமாக 229-இ (ஆல்ஃபா கரோனா வைரஸ்), என்எல்63 (ஆல்ஃபா கரோனா வைரஸ்), ஓசி43 (பீட்டா கரோனா வைரஸ்), ஹெச்கேயு1 (பீட்டா கரோனா வைரஸ்) போன்ற வைரஸ்கள் ஏற்கெனவே பரவலாக எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுதவிர, எம்இஆா்எஸ் -சிஓவி எனும் பீட்டா கரோனா வைரஸ் எம்இஆா்எஸ் என்ற சுவாச நோயையும், எஸ்ஏஆா்எஸ் - சிஓவி என்ற பீட்டா கரோனா வைரஸ் எஸ்ஏஆா்எஸ் எனும் கடுமையான சுவாச நோயையும் ஏற்படுத்தும். மேலும், எஸ்ஏஆா்எஸ் -சிஓவி2 ஆகிய வகை கரோனா வைரஸ்களும் உள்ளன.

வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்தவொரு நோயாளிக்கும் இந்த கரோனா வைரஸ் தாக்கப்படவில்லை. எனவே, உண்மையை அறியாமல் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். அவ்வாறு வதந்தி பரப்புவோரின் செயல் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com