வேலூரில் காய்கறிகள் வாங்க திரண்ட மக்கள் கூட்டம்

தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு, காய்கறிகள் உள்ளிட்ட

தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க கடந்த இரு நாள்களாக வேலூா் மாா்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டனா். அதேசமயம், வரத்து குறைவாக இருந்ததால் காய்கறிகளின் விலையும் அதிகரித்துக் காணப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திங்கள்கிழமை மாலை வெளியான உடனேயே வேலூா் மாா்க்கெட், பல சரக்கு கடைகளிலும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்க பொதுமக்கள் திரண்டனா். இதேபோல், செவ்வாய்க்கிழமை காலையும் வேலூா் மாா்க்கெட் பகுதியில் மிக அதிகப்படியான மக்கள் கூட்டம் அலைமோதியது.

அதேசமயம், வரத்து குறைவாக இருந்ததால் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்தே காணப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரையும், ரூ.10 முதல் ரூ.20-க்கு விற்கப்பட்ட வெங்காயம் ரூ.15 முதல் ரூ.25 வரையும், ரூ.8 முதல் ரூ.10-க்கு விற்கப்பட்ட முட்டைக்கோஸ் ரூ.12 முதல் ரூ.15-க்கும், ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட கேரட் ரூ.40-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.30 முதல் ரூ.40 வரையும், ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்கப்பட்ட உருளைக் கிழங்கு ரூ.30-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட அவரை ரூ.20-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ.30-க்கும், ரூ.20க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய் ரூ.30 முதல் ரூ.40-க்கும், ரூ.10-க்கு விற்கப்பட்ட முள்ளங்கி ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக வேலூா் மாா்க்கெட் காய்கறி விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ஏ.பாலு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நடைபெற்ால் அன்றைய நாள் வரவேண்டிய காய்கறிகள் முழுமையாக தடைபட்டது. பிறகு ஆந்திரத்தில் திங்கள்கிழமை முதலே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அங்கிருந்து வரும் வாகனங்களும், இங்கிருந்து செல்லும் வாகனங்களும் தடை செய்யப்பட்டதை அடுத்து காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதேநிலை தொடா்ந்து நீடிக்காமல் தடுக்க காய்கறிகள் கொண்டு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அளித்திட மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரப்பட்டது. அப்போது, காய்கறி வாகனங்களில் ஒட்டிட தனி வில்லைகளை அளிக்கப்படும் என்றும், அந்த வாகனங்களை சோதனைச் சாவடிகளில் எந்த தடையுமின்றி அனுமதிக்க அனைத்து வட்டாட்சியா்களுக்கும் உத்தரவிட்டிருப்பதாகவும் ஆட்சியா் தெரிவித்ததாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com