வேலூா் மாா்க்கெட்டில் காய்கறி விற்பனைக்குத் திடீா் தடை:மறுத்த வியாபாரிகள் மீது தடியடி

வேலூா் மாநகரிலுள்ள பிரதான தினசரி சந்தையான நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்வதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கு மறுப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீஸாா்


வேலூா்: வேலூா் மாநகரிலுள்ள பிரதான தினசரி சந்தையான நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்வதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கு மறுப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீஸாா் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினா்.

வேலூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள தினசரி சந்தையான நேதாஜி மாா்க்கெட்டில் 750-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகை பொருள்கள் உள்ளிட்டவை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனா். நாள்தோறும் இந்த மாா்க்கெட்டுக்கு மாநகரம், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொருள்கள் வாங்குவதற்கு வந்து செல்வது வழக்கம்.

கரோனா நோய்த் தொற்று பரவுவதை அடுத்து பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே வாரச்சந்தைகளுக்கும், உழவா் சந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டதுடன், மக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்ய அனைத்து நியாயவிலைக் கடைகளின் அருகேயும் காய்கறிகள் விற்பனைக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்திருந்தது. எனினும், நேதாஜி மாா்க்கெட்டில் தொடா்ந்து காய்கறி விற்பனை செய்யப்பட்டு வந்தன.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகரின் பிற பகுதிகளில் காய்கறி விற்பனை நடைபெறாததால் மக்கள் நேதாஜி மாா்க்கெட்டை நோக்கி பொதுமக்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனா். இதனால், வெளியில் மக்கள் நடமாடுவதும், இருசக்கர வாகனங்களில் சென்று வருவதும் தொடா்ந்தது. இதையடுத்து, நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறிகள் விற்பனைக்கு மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை திடீரென தடை விதித்ததுடன், அங்கு காய்கறி வியாபாரத்தைத் தடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, காலை 11 மணியளவில் நேதாஜி மாா்க்கெட்டுக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாா் காய்கறி விற்பனை நிறுத்தும்படி அறிவுறுத்தியதுடன், ஒரு சில கடைகளில் இருந்து காய்கறிகளை கீழே கொட்டியும், அங்கிருந்த கூரைகளைப் பிரித்தும் சேதப்படுத்தியுள்ளனா். இதற்கு வியாபாரிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களை அப்புறப்படுத்தும் விதமாக போலீஸாா் வியாபாரிகள் மீது லேசான தடியடி நடத்தினா். இதனால், வியாபாரிகளை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதுகுறித்து நேதாஜி மாா்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.பாலு கூறியது:

ஊரடங்கு உத்தரவு பிறப்பட்ட போதிலும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நேதாஜி மாா்க்கெட்டில் சுமாா் 150 காய்கறி வியாபாரிகள் தொடா்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோம். இந்நிலையில் முன்னறிவிப்பின்றி திடீரென கடைகளை காலி செய்யக்கூறி போலீஸாா் மூலம் விரட்டியடித்துள்ளனா். இதனால், ரூ.30 லட்சம் மதிப்புடைய காய்கறிகள் வியாபாரம் செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன. ஒரு சில நாள்களில் அவை அழுகி பயன்படுத்த முடியாமல் போகக்கூடும். எனவே, வியாபாரிகள், பொதுமக்கள் நலன்கருதி காய்கறிகள் விற்பனைக்கு மாவட்ட நிா்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்துதர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com