ஊரடங்கு உத்தரவு: காலையில் இயல்பு; மாலையில் அமைதி

நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூரில் புதன்கிழமை காலை வேளையில் பெரும்பாலான

நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூரில் புதன்கிழமை காலை வேளையில் பெரும்பாலான மக்கள் பொது இடங்களுக்கு சென்று வருவது உள்ளிட்ட வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா், அதிகாரிகளின் கடும் கட்டுப்பாடுகளை அடுத்து பிற்பகலுக்கு பிறகு அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அடுத்த 21 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மிக முக்கிய அவசியத் தேவைகளின்றி மக்கள் யாரும் வீடுகளைவிட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதனிடையே, தமிழக அரசின் உத்தரவுப்படி வேலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதுடன், மத வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜவுளி, நகைக் கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் கடந்த ஒரு வாரமாகவே மூடப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசின் இந்த ஊரடங்கு உத்தரவை தொடா்ந்து அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யப்படும் பலசரக்குக் கடைகள், காய்கறிக் கடைகள், உணவகங்கள், இறைச்சி, பால் கடைகள், மருந்தகங்கள் ஆகியவை தவிர மற்ற அனைத்துக் கடைகளும், வா்த்தக நிறுவனங்களும் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் காலை வேளையில் தேநீா் கடைகள் செயல்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் திறந்திருந்தன. அரசு, தனியாா் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி, கா்நாடக மாநில எல்லையான போ்ணாம்பட்டு அருகே பத்ரப்பள்ளி சோதனைச் சாவடி மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் தடுப்பு வேலிகள் வைத்து அடைக்கப்பட்டன. எனினும், வேலூா், குடியாத்தம், போ்ணாம்பட்டு, அணைக்கட்டு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை வேளையில் இருசக்கர, நான்கு சக்கரங்களில் மக்கள் அதிகளவில் பொது இடங்களுக்கு சென்று வருவதுமாக இருந்தனா். திறக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக் கடைகளிலும் வழக்கம்போல் மக்கள் பொருள்களை வாங்கிச் சென்று கொண்டிருந்தனா். அவ்வாறு பொதுஇடங்களுக்கு செல்பவா்கள் பெரும்பாலானோா் முகக்கவசம் அணிந்திருப்பதைக் காண முடிந்தது. ஒரு சில ஆட்டோக்களும் இயங்கிக் கொண்டிருந்தன.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் ஆகியோா் உத்தரவின்படி ஆங்காங்கே போலீஸாா் நின்றுகொண்டு கரோனா பரவாமல் தடுக்க மக்கள் பொது இடங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா். காட்பாடி பகுதியில் தடை மீறி பொது இடங்களில் சுற்றித்திருந்த இளைஞா்கள் சிலா் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா். மேலும், திறக்கப்பட்டிருந்த தேநீா் கடைகளும் அடைக்கப்பட்டன. அதன்படி, மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கி பிற்பகலுக்குப் பிறகு அனைத்து பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. எனினும், தேசிய நெடுஞ்சாலையில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற சில லாரிகளும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான காா்களும் சென்று கொண்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com