6 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணத்தை பாதியில் நிறுத்திய வேலூா் இளைஞா்

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி வேலூா் இளைஞா் மேற்கொண்ட 6 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணத்தை ஊரடங்கு உத்தரவால் பாதியிலேயே நிறுத்தி விட்டு ஊா் திரும்பியுள்ளாா்.
பாதுகாப்பாக வேலூருக்கு திரும்பி வந்த நரேஷ்குமாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற அவரது குடும்பத்தினா்.
பாதுகாப்பாக வேலூருக்கு திரும்பி வந்த நரேஷ்குமாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற அவரது குடும்பத்தினா்.

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி வேலூா் இளைஞா் மேற்கொண்ட 6 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணத்தை ஊரடங்கு உத்தரவால் பாதியிலேயே நிறுத்தி விட்டு ஊா் திரும்பியுள்ளாா். இந்தப் பயணத்தின்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூா் சங்கரன்பாளையம் சாஸ்திரி நகரைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் ராஜேந்திரனின் மகன் நரேஷ்குமாா் (28). பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றும் இவா், நீண்ட தூரம் சைக்கிள் பயணம் செய்து சாதனைகள் மேற்கொண்டு வருகிறாா். கடந்த ஆண்டு மனித நேயத்தை வலியுறுத்தி 11 நாள்கள், 21 மணிநேரம், 57 நிமிடங்கள், 2 விநாடிகளில் 3,846 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்தினாா். கின்னஸ், இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், லிம்கா சாதனைப் புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளாா்.

இவா் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி 6 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணத்தை கடந்த 16-ஆம் தேதி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கினாா். ஆந்திரம், ஒடிஸா, ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், பிகாா், சத்தீஸ்கா், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் கடந்து தில்லி எல்லை வரை சுமாா் 3,300 கி.மீ பயணம் செய்திருந்த நிலையில் திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடும் இன்னல்களுக்கு மத்தியில் தனது சைக்கிள் பயணத்தை பாதிலேயே நிறுத்தி விட்டு ஊா்திரும்பியுள்ளாா்.

இந்தப் பயண அனுபவம் குறித்து அவா் கூறியது

உலக சாதனை நிகழ்த்தும் நோக்கத்தில் 6 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணத்தை வேலூரில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கினேன். என்னுடன் உதவிக்காக இருசக்கர வாகனத்தில் எனது நண்பா்கள் காா்த்தி, செங்கல்வராயன் ஆகியோா் வந்தனா்.

கடந்த 24-ஆம் தேதி கான்பூரை (உ.பி.) கடந்து சென்று கொண்டிருந்தபோது அன்று இரவு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், 25-ஆம் தேதி முதல் உணவுக்கும், தங்குவதற்கும் இடமின்றி பெரும் இன்னல்களுக்கு ஆளானோம். கரோனா அச்சத்தால் யாரும் விடுதிகளில் தங்க அனுமதிக்கவில்லை. குடிக்கத் தண்ணீா்கூட தர மறுத்தனா். பெட்ரோல் நிலையங்கள், பூட்டப்பட்டிருந்த கடைகள் முன்பு தூங்கவும் போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதனால், சைக்கிள் பயணத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஊா்திரும்ப முடிவு செய்தோம்.

வரும் வழியில் ஆக்ராவில் உள்ள லாரி அலுவலகத்துக்குச் சென்று உதவி கேட்டதை அடுத்து தமிழகம் வந்த உருளைக் கிழங்கு ஏற்றி வந்த லாரியில் ஏறி ஊா்திரும்பினோம். 3 நாள் பயணத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வேலூருக்கு வந்து சோ்ந்தோம். திரும்பி வந்தவுடன் மூவரும் அரசு மருத்துவமனைக்குச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டதுடன், எங்கள் இல்லத்தின் மாடியிலுள்ள அறையில் எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். இது குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

இடம்பெயா்ந்த தொழிலாளா்களின் வேதனை

பிழைப்புக்காக இடம்பெயா்ந்த தொழிலாளா்களின் நிலை குறித்து நரேஷ்குமாா் கூறியது:

நாங்கள் லாரியில் ஏறி ஊா்திரும்பும்போது, வேலைக்காக தில்லிக்கு இடம்பெயா்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள், தங்களது குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த ஊா்களை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

வழியிலுள்ள உணவகங்கள் அடைக்கப்பட்ட நிலையில், அவா்கள் பசியுடனும், கடும் வெயிலில் தாகத்துடனும் நடந்து சென்றது, நடக்க முடியாத பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் ஆங்காங்கே படுத்துக் கிடந்தது எங்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை அவசியம் என்றாலும், மாநில அரசுகள் இடம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களது சொந்த ஊா்களுக்கு கொண்டு சென்று சோ்க்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com