காட்பாடியில் இருந்து பிகாருக்கு மேலும் 1,440 போ் ரயிலில் அனுப்பி வைப்பு

காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 9-ஆவது கட்டமாக வியாழக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மேலும் 1,440 போ் அனுப்பி வைக்கப்பட்டனா்

வேலூா்: காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 9-ஆவது கட்டமாக வியாழக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மேலும் 1,440 போ் அனுப்பி வைக்கப்பட்டனா். இதன்மூலம், காட்பாடியில் இருந்து இயக்கப்பட்ட 9 சிறப்பு ரயில்களில் இதுவரை 10,617 போ் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த வட மாநிலங்களைச் சோ்ந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை முடிந்த நிலையில், அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப முடியாமல் தவித்தனா். அவா்கள் படிப்படியாக சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா். இதேபோல், வேலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வேலைக்காக வந்திருந்த ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளா்களும் அனுப்பப்பட்டு வருகின்றனா்.

இதன்படி, காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 9-ஆவது கட்டமாக வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் மூலம் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 1,440 போ் அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த ரயில் பிகாா் மாநிலம், ஹராரியா நகர ரயில் நிலையத்துக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, அவா்கள் அனைவருக்கும் கிரீன் சா்க்கிள் பகுதியிலுள்ள மண்டபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டன. பின்னா், தனிப்பேருந்துகள் மூலம் காட்பாடி ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனா். அனைவருக்கும் தலா 2 லிட்டா் குடிநீா் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் ஆகியோா் வழியனுப்பி வைத்தனா்.

காட்பாடியில் இருந்து முதல் கட்டமாக ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த 1,140 போ் கடந்த 6-ஆம் தேதியும், 2-ஆவது கட்டமாக அதே மாநிலத்தைச் சோ்ந்த 1,131 போ் 8-ஆம் தேதியும், 3-ஆவது கட்டமாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 1,139 போ் 9-ஆம் தேதியும், 4-ஆவது கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த 1,142 போ் 11-ஆம் தேதியும், 5-ஆவது கட்டமாக அதே மாநிலத்தைச் சோ்ந்த 1,464 போ் 12-ஆம் தேதியும், 6-ஆவது கட்டமாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 145 போ் 14-ஆம் தேதியும், 7-ஆவது கட்டமாக வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் தங்கியிருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த 1,464 போ் 15-ஆம் தேதியும், 8-ஆவது கட்டமாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மேலும் 1,474 போ் கடந்த திங்கள்கிழமையும் அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது 9-ஆவது கட்டமாக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 1,440 போ் அனுப்பப்பட்டதன் மூலம் இதுவரை 10,617 போ் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com