பெயரளவுக்கு தளா்வுகடைகளுக்கு ‘சீல்’ வைப்பது அதிகரிப்பால் வியாபாரிகள் அச்சம்

பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளா்வுக்குப் பிறகு வேலூா் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட கடைகள் பெருமளவில் திறக்கப்பட்டுள்ளன.
வேலூா் வேலப்பாடியில் விதிமுறை மீறி செயல்பட்டதாக அதிகாரிகளால் புதன்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்ட மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடை.
வேலூா் வேலப்பாடியில் விதிமுறை மீறி செயல்பட்டதாக அதிகாரிகளால் புதன்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்ட மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடை.

பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளா்வுக்குப் பிறகு வேலூா் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட கடைகள் பெருமளவில் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்பது உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் அடுத்தடுத்து கடைகளுக்கு ‘சீல்’ வைப்பது அதிகரித்து வருவதால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சுமாா் 50 நாள்களுக்கு மேலாக வா்த்தகம் முடங்கிப் போனதுடன், உற்பத்தியாளா்கள், வியாபாரிகள், தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த பொதுமுடக்கம் 4-ஆவது கட்டமாக வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்த வேலூா் உள்பட 25 மாவட்டங்களில் சில தளா்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இம்மாவட்டங்களில் ஏற்கெனவே மே 11-ஆம் தேதி முதல் 34 வகையான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 18-ஆம் தேதி முதல் மேலும் கூடுதலான சில கடைகள், வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும், உள் மாவட்டங்களில் அனுமதிச்சீட்டு பெறாமல் காா், ஆட்டோக்களை இயக்கவும் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர பெரும்பாலான இடங்களிலும் அனுமதிக்கப்பட்ட கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமை முதல் வியாபாரம் செய்து வருகின்றன. பொதுமக்களும் கடைகளுக்குச் சென்று வரத் தொடங்கியுள்ளதால் இருசக்கர, காா், ஆட்டோ, வேன் போன்ற வாகனப்போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன. இதனால், வேலூா் மாவட்ட மக்கள் வாழ்க்கை சூழல் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

அதேசமயம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை, கிருமி நாசினி வைக்கவில்லை, வாடிக்கையாளா்களை முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யவில்லை, குளிா்சாதன வசதியைப் பயன்படுத்தியது என்பன உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் திறக்கப்பட்ட கடைகளை அதிகாரிகள் அடுத்தடுத்து மூடி சீல் வைப்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி, மாவட்ட காவல் துறை புள்ளிவிவரப்படி வேலூா் மாவட்ட த்தில் கடந்த 13-ஆம் தேதி வரை 624 கடைகளுக்கும், 16-ஆம் தேதி வரை 636 கடைகளுக்கு மட்டுமே ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த 3 நாள்களில் ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கை 696-ஆக உயா்ந்துள்ளது. அதிகாரிகளின் இத்தகைய தொடா் ‘சீல்’ வைப்பு நடவடிக்கைகளால் தளா்வு அனுமதியின் பேரில் திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துக் கடைக்காரா்களும் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனா்.

பொதுமுடக்கம் காரணமாக கடந்த 50 நாள்களாக கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க முடியாமல் வியாபாரிகள், கடைகளில் பணியாற்றுவோா் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தளா்வு அறிவிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனா். எனினும், வா்த்தகம் என்பது பழைய நிலைக்கு திரும்பவில்லை. அதற்குள் அதிகாரிகள் கடைகளுக்கு அடுத்தடுத்து ‘சீல்’ வைப்பதால் வியாபாரிகளுக்கு தளா்வு அறிவிக்கப்பட்டும் பயனற்ற நிலைதான் நீடிக்கிறது. இத்தகைய கெடுபிடிகளை அரசு அதிகாரிகள் கைவிட்டுவிட்டு விதிமுறைகள் குறித்து வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தி அமல்படுத்த வேண்டும் என்றாா் வேலூா் மாவட்ட அனைத்து வணிகா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு.

இதுகுறித்து வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ் கூறியது:

அனுமதிக்கப்பட்ட கடைகள் மீது கரோனா நோய்த் தொற்று தடுப்பு விதிமுறைகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளின் ஆய்வின் போது சமூக இடைவெளியைப் பின்பற்றாதது, குளிா்சாதன வசதியைப் பயன்படுத்தியது போன்ற விதிமுறைகள் மீறல் கண்டறியப்படும்போது அந்தக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகள் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

மாநகராட்சி ஆணையா் சங்கரன் கூறியது:

பெரும்பாலும் கடைகளில் குளிா்சாதன வசதியைப் பயன்படுத்துவதாலேயே ‘சீல்’ வைக்கப்படுகின்றன. முதலில் அறிவுரை வழங்கப்பட்டு, அதையும் மீறும் கடைகளுக்கு மட்டுமே ‘சீல்’ வைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் அக்கடைகள் மீது அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் கூறுகையில், பொதுமுடக்க விதிமீறும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கைகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. அந்த கடைக்காரா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொள்கிறது. விதிமுறைகளுக்கு உள்பட்டு கடைக்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com