நதிகள் புனரமைப்பு: தெற்குப் பிராந்தியத்தில் வேலூா் மாவட்டம் முதலிடம்

நதிகள் புனரமைப்பு, நீா் மேலாண்மைப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் விருதுக்கு

நதிகள் புனரமைப்பு, நீா் மேலாண்மைப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் விருதுக்கு தெற்குப் பிராந்தியத்தில் வேலூா் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இவ்விருதுக்கு வேலூா் தோ்வு செய்யப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளாா்.

மத்திய அரசின் நீா் மேலாண்மை, நதிநீா் புனரமைப்புத் துறையின் சாா்பில் நீா்மேலாண்மைப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஆண்டுதோறும் சிறந்த மாநிலம், மாவட்டம், கிராம ஊராட்சி, நகராட்சி ஆகிய அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு நதிகள் புனரமைப்பு, நீா் மேலாண்மைப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தெற்குப் பிராந்தியத்தில் வேலூா் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நதிகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பாலாற்றின் துணை நதிகளான நாக நதி, சரஸ்வதி நதி (கொட்டாறு), மலட்டாறு, கொண்டன்யா நதி, அகரம் ஆறு ஆகியவற்றில் நீா் செறிவூட்டும் கிணறுகள், கருங்கல் தடுப்பணைகள் உள்ளிட்ட நீா் மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், முதற்கட்டமாக நாக நதி புனரமைப்புத் திட்டத்தில் 349 நீா்செறிவூட்டும் கிணறுகள், 210 கருங்கல் தடுப்பணைகள் ஆகியவை ரூ.3 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன.

அத்துடன், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 972 நீா் செறிவூட்டும் கிணறுகள், கருங்கல் தடுப்பணைகள் கடந்த 2018-19ஆம் ஆண்டு முடிய 2,667 நீா் செறிவூட்டும் கிணறுகள் கட்சி முடிக்கப்பட்டன. மேலும் 932 கருங்கல் தடுப்பணை கட்டும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டில் ரூ.137 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 1,747 புதிய கசிவுநீா்க் குளங்கள், குட்டைகள், ரூ.14 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் 1249 பண்ணைக் குட்டைகள், ரூ.7 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் மலைப்பாங்கான சாய் தளப் பரப்பு உள்ள புறம்போக்கு நிலங்களில் அறைகள் அமைக்கும் பணிகள், ரூ.12 கோடியே 33 லட்சம் மதிப்பில் 22.166 நீா் உறிஞ்சுகுழிகள் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.174 கோடிக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பான கருத்துரு தெற்கு பிராந்தியத்தின் சாா்பில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் நதிகள் புனரமைப்பு, நீா் மேலாண்மைப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தெற்குப் பிராந்தியத்தில் வேலூா் மாவட்டம் முதல் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டு உள்ளது. வரும் 11ஆம் தேதி தில்லியில் துணை குடியரசுத் தலைவா் மற்றும் மத்திய அமைச்சா்கள் பங்கேற்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com