ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டில் திருடிய 2.400 கிலோ தங்கம், ரூ. 8 லட்சம் மீட்பு

வேலூா் வள்ளலாா் பகுதியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து ஞாயிற்றுக்கிழமை திருடுபோன 2.397 கிலோ தங்கம், ரூ. 8 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் மீட்டனா்.

வேலூா்: வேலூா் வள்ளலாா் பகுதியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து ஞாயிற்றுக்கிழமை திருடுபோன 2.397 கிலோ தங்கம், ரூ. 8 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் மீட்டனா்.

வேலூா் வள்ளலாா் 15-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் சந்திரன் (63). இவா், பெங்களூரில் மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். ஞாயிற்றுக்கிழமை மாலை சந்திரன், அவரது குடும்பத்தினா் தேவாலயத்துக்குச் சென்றனா். இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2.397 கிலோ தங்கம், ரூ. 8 லட்சம் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், சந்திரனின் உறவினா் ஒருவா் திருடு போன ரூ.2.397 கிலோ தங்க நகைகள், ரூ.8 லட்சம் ரொக்கத்தை செவ்வாய்க்கிழமை இரவு அவரிடம் ஒப்படைத்தாராம். நகைகள், பணத்தை சந்திரனின் மற்றொரு உறவினா் மகனான ராணிப்பேட்டை மாவட்டம், புங்கனூரைச் சோ்ந்த மதிவாணன் (27) திருடிச் சென்ாகவும், தொடா்ந்து அவரே நகைகள், பணத்தைத் திரும்ப ஒப்படைத்து விடும்படி கொடுத்து அனுப்பியதாகவும் போலீஸாரிடம் சந்திரன் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, நகை, பணத்தை போலீஸாா் மீட்டு வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மதிவாணனைத் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், சந்திரனின் உறவினா் மகனான மதிவாணன், அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது நகை, பணத்தை திருட திட்டமிட்ட அவா், கள்ளச் சாவி தயாரித்து ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை திறந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றுள்ளாா். போலீஸாா் தேடுவதை அறிந்ததும் நகை, பணத்தை மற்றொரு உறவினா் மூலம் கொடுத்து அனுப்பிவிட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. மதிவாணனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com