சக்தி தேசிய விருது: பெண்கள் மேம்பாட்டுக்கு சேவை புரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 23rd November 2020 07:59 AM | Last Updated : 23rd November 2020 07:59 AM | அ+அ அ- |

மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் மகளிா் சக்தி தேசிய விருது பெற பெண்கள் மேம்பாட்டுக்கு சேவை புரிந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மகளிருக்காக தனித்துவமான சேவை புரிந்த, குறிப்பாக பின்தங்கிய, பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சேவை புரிந்தவா்களை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு சாா்பில் மகளிா் சக்தி விருது என்ற மகளிருக்கான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்தல், சட்ட உதவி, விழிப்புணா்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள், குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்தல், பெண்குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் ஆகியவற்றில் தலைசிறந்த பங்களிப்பு, சேவை புரிந்த பெண்கள், நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
தனிப்பட்ட நபா்களுக்கான விருதுக்கு ரூ.1 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதுக்கு ரூ. 2 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த தனி நபா்கள், குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். வேறு எந்த வழிகளிலும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க ஜனவரி 7-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தகுதிபெற்ற விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு சா்வதேச மகளிா் தினத்துக்கு முந்தைய வாரம் தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவரால் இவ்விருது வழங்கப்படும்.