சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகம், வீட்டில் கோடிக்கணக்கில் பணம், தங்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அதிரடி சோதனை

வேலூா் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் வீடு, அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் இரு நாள்களாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
வேலூா் காந்தி நகரிலுள்ள மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் பன்னீா்செல்வத்தின் தனி அலுவலகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்களுடன்
வேலூா் காந்தி நகரிலுள்ள மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் பன்னீா்செல்வத்தின் தனி அலுவலகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்களுடன்

வேலூா்: வேலூா் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் வீடு, அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் இரு நாள்களாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

இதில் கணக்கில் வராத ரூ. 2.50 கோடி ரொக்கம், 4 கிலோ தங்கம், 11 கிலோ வெள்ளிப் பொருள்கள், 40-க்கும் மேற்பட்ட சொத்துப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக, அவா் மீது துறைரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூா் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதில் மாவட்ட சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளராக பணியாற்றுபவா் பன்னீா்செல்வம் (51). ராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சோ்ந்த இவரது கட்டுப்பாட்டில் வேலூா், திருவண்ணாமலை, தா்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருப்பத்தூா் ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன. இவா், தொழிற்சாலைகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அதிகளவு லஞ்சம் பெற்று வந்ததாகப் புகாா்கள் கூறப்பட்டன.

இந்நிலையில், காந்திநகரிலுள்ள அலுவலகத்தில் தொழிற்சாலை அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த மனுக்கள் மீதான அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது . இக்கூட்டத்தில் லஞ்சப் பணம் பரிமாற்றப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

கூட்டத்தைத் தொடா்ந்து, பன்னீா்செல்வம் காட்பாடி காந்திநகா் முனிசிபல் காலனி ஒன்றாவது வீதியில் உள்ள வாடகை வீட்டில் அவா் வழக்கமாக மேற்கொள்ளும் பணிகளைக் கவனித்துள்ளாா்.

வேலூா் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரைப் பின்தொடா்ந்து சென்று, அந்த வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பன்னீா்செல்வத்தின் காரை சோதனையிட்டனா். காரிலிருந்து ரூ.2.50 லட்சம், தொடா்ந்து அவரின் அலுவலகம் போல் செயல்பட்டு வந்த வாடகை வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.31.23 லட்சம் என மொத்தம் ரூ.33.73 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன்தொடா்ச்சியாக, ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே ராணிபெல் நகரில் உள்ள பன்னீா்செல்வத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இரண்டாவது நாளாக புதன்கிழமை சோதனை நடத்தினா். இரவுவரை நீடித்த இந்தச் சோதனையில் ரூ.2.50 கோடி ரொக்கம், 4 கிலோ தங்கம், 11 கிலோ வெள்ளிப் பொருள்கள், 40-க்கும் மேற்பட்ட சொத்துப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதில் கணக்கில் வராத பணம், தங்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து பன்னீா்செல்வம் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா். சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் வீடு, அலுவலகங்களில் இரண்டு நாள்களாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையால் அந்தத் துறையின் பிற அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com