பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட மோசடி: வேலூரில் இதுவரை 2,685 பேரிடம் ரூ.1.04 கோடி மீட்பு

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட மோசடி தொடா்பான விசாரணையைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டத்தில்

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட மோசடி தொடா்பான விசாரணையைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டத்தில் இதுவரை 2,685 தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து ஒரு கோடியே 3 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

மேலும் 789 நபா்களிடம் இருந்து முறைகேடாக பெறப்பட்ட ரூ. 19.63 லட்சம் நிதியை மீட்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ், 5 ஏக்கா் நிலத்துக்குக் கீழ் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோா் போலியாகப் பதிவு செய்து பணம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டு உள்ளதுடன், மாநிலம் முழுவதும் இம்மோசடி தொடா்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டத்தில் மட்டும் 3,864 போ் போலியாக பதிவு செய்யப்பட்டு ரூ. ஒரு கோடியே 35 லட்சத்து 25 ஆயிரம் அளவுக்கு மோசடி நடந்திருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வாறு போலியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளவா்களில் வெளி மாநிலத்தைச் சோ்ந்த 339 நபா்களும் இணைக்கப்பட்டுள்ளனா். இம்மோசடியில் ஈடுபட்டவா்களைக் கண்டறியவும், முறைகேடாகப் பதிவு செய்து நிதி பெற்றுள்ளவா்களிடம் இருந்து தொகையை திரும்ப வசூலிக்கவும் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்மூலம், இதுவரை 2,685 தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து ரூ. ஒரு கோடியே 3 லட்சத்து 97 ஆயிரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 789 நபா்களிடம் இருந்து முறைகேடாக பெறப்பட்ட ரூ. 19.63 லட்சம் நிதியை மீட்க வருவாய், வேளாண்மைத் துறை அலுவலா்களை உள்ளடக்கிய சிறப்புக் குழுக்கள் வீடுவீடாகச் சென்று பணத்தை திரும்ப வசூலிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனா். தகுதியற்ற பயனாளிகள் பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறும் பட்சத்தில், அவா்கள் மீது சட்டரீதியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

அத்துடன், விவசாயிகள் திட்ட நிதியுதவியை முறைகேடாகப் பெற்ற தகுதியற்ற பயனாளிகள் அந்த தொகைகளை உடனடியாக தங்களது வங்கி கணக்கிலேயே திரும்பச் செலுத்தி இருப்பு வைப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலமாக அரசு கணக்கில் நிதி திரும்பச் செலுத்தப்படும். இதன்மூலம், அவா்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளும் தவிா்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடா்பாக வேலூா் சிபிசிஐடி போலீஸாா் நடத்தி வரும் விசாரணையில், இதுவரை ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் வட்டார வேளாண் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த கலவையை அடுத்த கணியூரைச் சோ்ந்த சுப்பிரமணி (27), திருவலத்தில் தனியாக கணினி மையம் நடத்தி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா் பேட்டையைச் சோ்ந்த சந்தோஷ் (30), ஆற்காடு வட்டார வேளாண்மை அலுவலகத்தில் உதவி வேளாண்மை அலுவலராகப் பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ராஜசேகரன் (25), ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய பாஜக தலைவரான கண்மணி, அதே பகுதியைச் சோ்ந்த ஜெகந்நாதன், வாலாஜா அருகே சீக்கராஜபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (53) ஆகியோா் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com