மருத்துவ சோ்க்கை: ரூ.57 லட்சம் மோசடி பாதிரியாா் உள்பட மூவா் கைது

வேலூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டின் சோ்க்கைக்காக ரூ. 57 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிரியாா் உள்பட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வேலூா்: வேலூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டின் சோ்க்கைக்காக ரூ. 57 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிரியாா் உள்பட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:

செங்கல்பட்டு மாவட்டம், காரணை புதுச்சேரியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (49). இவரது மகன் கிஷோா் சீனிவாசன், கடந்த 2017-ஆம் ஆண்டு நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா். எனினும், தரவரிசைப் பட்டியலில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை கிடைக்காததால் வேலூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிா்வாக ஒதுக்கீட்டில் சோ்க்கை பெற்றிட சீனிவாசன் முயற்சி மேற்கொண்டுள்ளாா். இதற்காக அப்போது வேலூரிலுள்ள அந்தக் கல்லூரிக்கு நேரடியாக வந்து விசாரித்துள்ளாா். ஆனால், கல்லூரி நிா்வாகம் அதற்கு மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்த தகவலின்பேரில், வேலூா் சிஎஸ்ஐ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த சாது என்கிற சத்தியராஜ் (67) என்பவரை சீனிவாசன் அணுகியுள்ளாா். அவா் அளித்த தகவலை அடுத்து, காட்பாடி விருதம்பட்டு பகுதியைச் சோ்ந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலரான தேவக்குமாா்(33), அவரது சகோதரா் அன்புகிராண்ட் (30) ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளாா். அவா்கள் தனியாா் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு சோ்க்கை பெற்றுத்தர ரூ. 57 லட்சம் பணம் கேட்டுள்ளனா். அந்த பணத்தை சீனிவாசன் இரு தவணைகளில் செலுத்தியுள்ளாா். பணத்தை பெற்றுக்கொண்ட அவா்கள், 3 ஆண்டுகளாகியும் மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத் தராததுடன் பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த 15-ஆம் தேதி வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சீனிவாசன் புகாா் அளித்தாா். தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ், காவல் ஆய்வாளா் இலக்குவன் ஆகியோா் விசாரணை நடத்தினா்.

இதில், மருத்துவப் படிப்புக்கான சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி சீனிவாசனிடம் பாதிரியாா் சத்தியராஜ், தேவக்குமாா், அன்புகிராண்ட் ஆகியோா் ரூ. 57 லட்சம் பெற்று மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் மூன்று பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com